கோல் பதிவு செய்த விர்ஜில் வான் டைக்: லீக் கோப்பையை வென்ற லிவர்பூல்

By செய்திப்பிரிவு

லண்டன்: நடப்பு இங்கிலீஷ் ஃபுட்பால் லீக் (EFL) தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது லிவர்பூல் அணி. ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் கேப்டன் விர்ஜில் வான் டைக் பதிவு செய்த கோல் மூலம் லிவர்பூல் வெற்றி பெற்றது. 1-0 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் செல்சீ அணியை வீழ்த்தியது. ஸ்பான்சர்ஷிப் காரணமாக Carabao Cup என தற்போது அறியப்படுகிறது.

92 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த சீசனில் பல்வேறு சுற்று ஆட்டங்களுக்கு பிறகு காலிறுதி, அரையிறுதி, இறுதி என போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் லிவர்பூல் மற்றும் செல்சீ பலப்பரீட்சை மேற்கொண்டன. லிவர்பூல் அணியின் முன்னணி வீரர்கள் இந்த போட்டியை மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இளம் வீரர்கள் அடங்கிய அணியுடன் லிவர்பூல் விளையாடியது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணியும் கோல் பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தன. பந்தை கடத்துவதில் தொடங்கி டார்கெட்டை நோக்கி பந்தை அடிப்பது வரையில் இரு அணியும் சிறப்பான திறனை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 90 நிமிடங்களில் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் கூடுதல் நேரம் வரை ஆட்டம் சென்றது. இதில் 118-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் விர்ஜில் வான் டைக். அதன் மூலம் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து மைதானத்தில் குழுமியிருந்த 88,000+ பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து அசத்தினர். லிவர்பூல் அணி, கடந்த 2022-க்கு பிறகு லீக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE