ராஞ்சி டெஸ்ட் | துருவ் ஜூரெல் சிறப்பான ஆட்டம் - இந்தியா 307 ரன்களுக்கு ஆல் அவுட்

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.

விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்களுடனும், குல்திப் யாதவ் 17 ரன்களுடனும் 3ம் நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிறு) தொடங்கினர். இருவரும் விக்கெட் விழாத வண்ணம் நிதானமாக விளையாடினர். இங்கிலாந்தின் பந்துவீச்சு தாக்குதலை திறம்பட கையாண்டனர். துருவ் ஜூரெல் அரைசதம் கடந்தார். குல்திப் யாதவ் 131 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஜூரெலுக்கு பக்கபலமாக இருந்தார்.

ஆனால், ஆண்டர்சனின் பந்துவீச்சில் எதிர்பாரதவிதமாக போல்டானார். இக்கூட்டணி 80 ரன்கள் வரை சேர்த்து இந்திய அணியை பரிதாபகரமான நிலையில் இருந்து மீட்டது. இதேபோல் ஆகாஷ் தீப் தன் பங்குக்கு 29 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்து பொறுமை காத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம், துருவ் ஜூரெல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், 149 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என விளையாடி 90 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லியின் அசாத்திய பந்துவீச்சில் போல்டாகி விக்கெட்டை இழந்தார்.

துருவ் ஜூரெலின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது இந்திய அணி. இதன்மூலம் இங்கிலாந்தை விட 46 ரன்கள் பின்னிலையில் உள்ளது இந்தியா. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட், டாம் ஹார்ட்லி 3 விக்கெட், ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE