ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதம் காரணமாக சரிவில் இருந்து மீண்டு முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது.
ராஞ்சியில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஓவர்களில் இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரனா ஆகாஷ் தீப் சீரான வேகம், இன் ஸ்விங்கால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.
ஸாக் கிராவ்லி 4 ரன்களில் இருந்த போது ஆகாஷ் தீப்பின் அற்புதமான இன் ஸ்விங்கரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதுநோபால் ஆனது. இதன் பின்னர் ஸாக் கிராவ்லி மட்டையை சுழற்றினார். முகமது சிராஜ் வீசிய 7-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ஸாக் கிராவ்லி. மறுமுனையில் நிதானமாக விளையாடிய பென் டக்கெட் 21 பந்துகளில், 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
ஆகாஷ் தீப் சிறந்த நீளத்தில் ஆஃப் ஸ்டெம்புக்கு நன்கு வெளியே வீசிய பந்தை பென் டக்கெட் அரை மனதுடன் கால்களை நகர்த்தி முன்னாள் தள்ள முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. இதே ஓவரின் 4-வது பந்தில் ஆலி போப்பை ரன் ஏதும் எடுக்காத நிலையில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் ஆகாஷ் தீப். அதிரடியாக விளையாடிய ஸாக் கிராவ்லி 42 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப்பின் பந்தில் போல்டானார்.
57 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஜோ ரூட்டுடன் இணைந்த ஜானி பேர்ஸ்டோ விரைவாக ரன்கள் சேர்க்க முயன்றார். 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்த ஜானி பேர்ஸ்டோ ஸ்வீப் ஷாட் விளையாட முயன்று ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசியமிக தாழ்வான பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 24.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளைக்கு பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பென் ஃபோக்ஸ் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்ட அணுகு முறையை கைவிட்டு இந்திய வீரர்களின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது. இதனால் தேநீர் இடைவேளையில் மேற்கொண்டு விக்கெட் விழவில்லை. 261 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஒரு வழியாக முகமது சிராஜ் பிரித்தார். பென் ஃபோக்ஸ் 126 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தை மிட்விக்கெட் திசையில் நின்ற ஜடேஜாவிடம் எளிதாக பிடிகொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய டாம் ஹார்ட்லி 13 ரன்களில் சிராஜ் பந்தில் போல்டானார். 245 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி எஞ்சிய விக்கெட்களை விரைவாக இழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒருபுறம் நங்கூரமிட்டு ஜோ ரூட் நிற்க மறுமுனையில் ஆலி ராபின்சன் சீராக ரன்கள் குவித்தார். நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் 219 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் தனது 31-வது சதத்தை விளாசினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.
ஜோ ரூட் 106, ஆலி ராபின்சன் 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 57 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க இங்கிலாந்து அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
அதிக சதங்கள்: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோ ரூட் சதம் விளாசினார். இந்திய அணிக்கு எதிராக அவர், விளாசிய 10-வது சதம் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட். இந்த வகை சாதனையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 9 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
‘அஸ்வின் 100’: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின் கைப்பற்றிய 100-வது விக்கெட் இதுவாகும். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் பேட்டிங்கில் ஆயிரம் ரன்களும், பந்து வீச்சில் 100 விக்கெட்களும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத் துள்ளார்.
கைகொடுத்த பழமைவாத அணுகுமுறை: ராஞ்சி போட்டியில் இங்கிலாந்து அணி விரைவாக 5 விக்கெட்களை பறிகொடுத்ததும் தனது பாஸ்பால் அணுகுமுறையை கைவிட்டு நிலைத்து நின்று விளையாடும் பழமைவாத அணுகுமுறையை தகவமைத்துக் கொண்டு விளையாடியது. ஜோ ரூட் தனியொரு பேட்ஸ்மேனாக போராடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 33 வயதான ஜோ ரூட் 226 பந்துகளை எதிர்கொண்டு 106 ரன்களை சேர்த்தார். 15 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவர், அடித்த முதல் சதமாக இது அமைந்தது. ஜோ ரூட்டுக்கு உறுதுணையாக பென் ஃபோக்ஸ், ஆலி ராபின்சன் செயல்பட்டனர். இதன் காரணமாகவே முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது.
பாஸ்பால் அணுகுமுறையை கைவிட்டு ஜோ ரூட் தனது இயல்பான பாணியில் களத்தில் நீண்ட நேரம் செலவிட்டு அதிக பந்துகளை எதிர்கொண்டார். அவரது இந்த செயல்திறன் இங்கிலாந்து அணிக்கு சிறந்த பலனை கொடுத்தது. ஜோ ரூட்டின் சதத்தில் 9 பவுண்டரிகள் அடங்கியிருந்தன. ஆடுகளத்தில் பந்துகள் எழுந்து வருவதில் அதிக வித்தியாசங்கள் இருந்ததால் ஸ்வீப் ஷாட்டை தவிர்த்தார். 80 ஓவர்கள் களத்தில் செலவிட்ட ஜோ ரூட் ஒரே ஒரு முறை மட்டுமே வழக்கமான ஸ்வீப் ஷாட்டையும், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை ஒரு முறையும் மேற்கொண்டார். முழுமையாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தபடி அவர், விளையாடினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக கால்களை பின்னுக்கு நகர்த்தி அருமையாக ரன்கள் சேர்த்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
39 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago