நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா முதல் டி20-ல் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டன் நகரில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3டி 20 ஆட்டங்கள், 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில்விளையாடுவதற்காக நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டன் நகரில் இன்று காலை 11.40 மணிக்கு நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் 23-ம் தேதியும் கடைசி மற்றும் 3-வதுஆட்டம் 25-ம் தேதியும் ஆக்லாந்தில் நடைபெறுகின்றன.

வரும் ஜூன் மாதம், ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள நிலையில் தற்போது நடைபெற உள்ள இருதரப்பு டி20 தொடர் நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கக்கூடும். நியூஸிலாந்து அணி மிட்செல் சாண்ட்னர் தலைமையில் களமிறங்குகிறது. நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சனுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் டிரெண்ட் போல்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி முழுபலத்துடன் மிட்செல் மார்ஷ் தலைமையில் டி20 தொடரை சந்திக்கிறது. இரு அணிகளும் கடைசியாக டி20 கிரிக்கெட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மோதி இருந்தன. அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது. சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் நியூஸிலாந்து தொடரை சந்திக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE