உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் | நாக் அவுட் சுற்றில் நுழைந்தது இந்திய ஆடவர், மகளிர் அணிகள்

By செய்திப்பிரிவு

பூசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

தென் கொரியாவின் பூசான் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் தனது முதல் ஆட்டத்தில் சீனாவிடம் 2-3 என தோல்வி அடைந்தது. எனினும் அதன் பின்னர் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி ஹங்கேரியை 3-2 என்ற கணக்கிலும், உஸ்பெகிஸ்தானை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஸ்பெயினுடன் மோதியது. இதில் முதலில் நடைபெற்ற இரு ஒற்றையர் பிரிவு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 9-11, 11-9, 11-13, 4-11என்ற செட் கணக்கில் மரியா சியாவோவிடம் தோல்வி அடைந்தார். அதேவேளையில் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ராவை 13-11, 6-11, 8-11,11-9,11-7 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார் ஸ்பெயினின் சோபியா ஜூவான் ஜாங்.

இரு தோல்விகளால் இந்திய மகளிர் அணி 0-2 என பின் தங்கிய நிலையில் இருந்தது. எனினும் அடுத்து நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தியது. அய்ஹிகா முகர்ஜி 11-8, 11-13, 11-8, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் எல்விரா ராடை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து மணிகா பத்ரா 11-9, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் மரியா சியாவோவையும், ஸ்ரீஜா அகுலா 11-6, 11-13, 11-6, 11-3 என்ற செட் கணக்கில் சோபியா ஜூவான் ஜாங்கையும் தோற்கடித்தனர்.

இந்திய மகளிர் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் குரூப் 1-ல் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி. 40 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் 24 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதிலும் வெற்றி கண்டு இந்திய அணி கால் இறுதி சுற்றில் கால்பதித்தால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அணிகள் பிரிவில் விளையாட தகுதி பெறும்.

ஆடவர் பிரிவிலும்.. ஆடவர் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதியது. இதில் இந்திய ஆடவர் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றில் கால்பதித்தது. முதல் ஆட்டத்தில் ஹர்மீத் தேசாய் 11-5, 11-1, 11-6 என்ற செட் கணக்கில் சோய் திமோதியை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் ஜி.சத்தியன் 11-3, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் ஆல்ஃபிரட் பெனா டெலாவை வீழ்த்தினார்.

இதன் பின்னர் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் மனுஷ் ஷா, மேக்ஸ்வெல் ஹென்டர்சனுடன் மோதினார். இதில் மனுஷ் ஷா 10-12, 6-11, 11-4, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் அணி குரூப் 3-ல் 3-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் தென் கொரியா முதலிடமும், போலந்து 2-வது இடமும் பிடித்து நாக் அவுட் சுற்றில் நுழைந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE