அனுபவ வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு குறித்து மனம் திறக்கும் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்

By பெ.மாரிமுத்து

னுபவ வீரர்களின் அடிப்படையிலேயே சிஎஸ்கே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த சீசனில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது. இதற்கிடையே இம்முறை சிஎஸ்கே அணியில் 30 வயதை கடந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் (தோனி, பிராவோ, ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், டு பிளெஸ்ஸிஸ், கேதார் ஜாதவ், ரெய்னா, அம்பாட்டி ராயுடு, வாட்சன், முரளி விஜய், கரண் சர்மா) இதனால் சீனியர் கிங்ஸ் அணி எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அனுபவ வீரர்களின் அடிப்படையிலேயே சிஎஸ்கே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக பல்வேறு விஷயங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:

2 வருடங்களுக்குப் பிறகு அணி திரும்புகிறது, மக்களிடத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக் கிறது?.

அணியின் மதிப்பு குறையாமல் தான் உள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் அப்படியே தான் உள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் நடத்தப்பட்ட ஆய்வில் பார்த்த போது சென்னை அணி இல்லாததால் தமிழகத்தில் போட்டியை பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவந்தது. ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அணியின் மதிப்பு குறையவில்லை. ஸ்பான்சர்ஷிப் விஷயங்களில் கூட மற்ற அணிகளைவிட நாங்கள் முன்னதாகவே அனைத்து பணிகளையும் முடித்துவிட்டோம்.

கடந்த சீசன்களில் ஏர்செல் ஸ்பான்சராக இருந்தார்கள். இம்முறை எந்த நிறுவனம் உள்ளது?

ஸ்பான்சர்ஷிப் அனைத்தும் முடிவாகி விட்டது. அதனை முறைப்படி விரைவில் நாங்கள் அறிவிப்போம்.

இம்முறை சிஎஸ்கே அணியில் சீனியர் வீர்கள் அதிகம் உள்ளனரே ஏன்?

அனுபவ வீரர்களின் அடிப்படையை கொண்டே அணியை தேர்வு செய்துள்ளோம். இந்திய அணியில் மற்ற வீரர்களை விட தோனி முழு உடல் தகுதியுடன் விளையாடி வருகிறார். எங்களை பொறுத்தவரை அனுபவம் முக்கியம். அதேவேளையில் இளம் வீரர்களும் அணியில் உள்ளனர். சரியான கலவையில்தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பார்ப்பதற்கு அணி பலமாகவே உள்ளது. களத்திலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்களுக்கு அணி மீது முழு நம்பிக்கை உள்ளது.

சிஎஸ்கே அணி பங்கேற்ற 8 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றில் இருந்துள்ளது. இதில் இரு முறை சாம்பியன், 4 முறை 2-வது இடம் பிடித்துள்ளது. இரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அதே திறனை மீண்டும் வெளிப்படுத்த முடியுமா?

அதற்குத்தான் நாங்களும் முயற்சி செய்கிறோம். எங்களது நோக்கமே அதுதான். முதலில் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய வேண்டும். டி 20 ஆட்டம் என்பது கணிக்க முடியாது. அப்படியிருக்கையில் 8 வருடங்கள் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தினோம். இதேபோன்ற திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது ஆவல். அதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். தற்போதுள்ள அணியால் அது சாத்தியப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீபத்தில் தோனி அளித்த ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களை அதிகளவில் சேர்க்க முயற்சி செய்வோம் என தெரிவித்திருந்தார். எனினும் ஜெகதீசன், முரளி விஜய் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதற்கான காரணம்?

ஏல முறையில் யார் முதலில் வருகிறார்களோ அவர்களைத்தான் எடுக்க முடியும். எங்களுக்கென்று ஒரு அணிச்சேர்க்கை உள்ளது. அந்த அணிச் சேர்க்கைக்கு தகுந்தபடி சமநிலையை ஏற்படுத்த வேண்டும். முதலில் வரும் வீரர்களை விட்டுவிட முடியாது. பின்னால் வரும் வீரருக்காக காத்திருந்தால் ஒரு அணியை உருவாக்க முடியாது.

இதனால் இந்த வீரரைத்தான் எடுக்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருக்க முடியாது. உதாரணமாக அஸ்வினை முதலில் எடுக்க முயற்சி செய்தோம். ஒரு அளவுக்கு மேல் எங்களால் அவரை எடுக்க முடியாமல் போனது. முரளி விஜய் ஏலம் எடுக்கப்படாமல் இருந்தால் அவரை பிற்பகுதியில் எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் இருந்தோம். எங்களது எதிர்பார்ப்பின்படியே அது நடந்தது.

அதன் பின்னர் ஹர்பஜன், கேதார் ஜாதவை எடுத்தோம். இதன் பின்னரே தினேஷ் கார்த்திக் ஏலப்பட்டியலில் வந்தார். தினேஷ் கார்த்திக்கிற்காக நாங்கள் காத்திருந்தால் ஹர்பஜன், கேதார் ஜாதவை எடுத்திருக்க முடியாது. ஏலமுறையில் எங்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறதோ, அதைத்தான் பயன்படுத்த முடியும். தமிழக வீரரைத்தான் எடுக்க வேண்டும் என்ற முடிவுடன் நாங்கள் இருக்க முடியாது.

வாஷிங்டன் சுந்தர் ஏலப்பட்டியலில் கடைசி பகுதியில்தான் வந்தார். அவர் 133-வது வீரராக இடம் பெற்றிருந்தார். அவரை நாங்கள் எடுக்க வேண்டும் என்றுதான் விரும்பினோம். ஆனால் அவருக்காக காத்திருந்தால் சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்திருக்க மாட்டார்கள்.

இம்முறை சுழற்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றம் உள்ளதே?

அப்படி இல்லை. மார்க்வுட், லுங்கி நிகிடி ஆகியோர் 140 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசக்கூடியவர்கள். இவர்களுடன் ஷர்துல் தாக்கூர், தீபக் ஷகார், கனிஷ்க் சேத் ஆகியோரும் உள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கனிஷ்க் சேத் இடது கை வேகப்பந்து வீச்சாளர். உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவை தவிர பிராவோ, வாட்சனும் இருக்கிறார்கள். மொத்தத்தில் வேகம், சுழல் ஆகிய இரண்டுக்கும் வலுவான வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சில் டி 20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இம்ரன் தகிர், ஹர்பஜன், ஏற்கெனவே தனது திறனை நிருபித்துள்ள கரண் சர்மா, இடது கை சுழல் வீரர் மிட்செல் சான்ட்னர் ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜாவும் இருக்கின்றனர். சுழல், வேகம் ஆகிய இரண்டும் சமநிலையை வகிக்கும் வகையில்தான் அணியை தேர்வு செய்துள்ளோம்.

பேட்டிங்கில் இம்முறை தொடக்க வீரர்களில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் யாரும் இடம் பெறாதது போன்ற தோற்றம் இருக்கிறதே?

டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், வாட்சன் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுக்கக்கூடியவர்கள்தான். இவர்களுடன் சேம் பில்லிங்ஸ் இடம் பெற்றுள்ளார். அவரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்தான். இம்முறை மெக்கலத்தை எடுக்க முடியவில்லை. ஏலப்பட்டியலில் டு பிளெஸ்ஸிஸ் முதலில் வந்ததால் அவரை எடுத்துக்கொண்டோம்.

சிஎஸ்கே அணிக்காக வெப் டிவி உருவாக்கப்படுவதாக கூறப்பட்டதே. அதன் நிலை தற்போது எந்த அளவில் உள்ளது?

டேக்பிளே நிறுவனம்தான் எங்களது டெக்னிக்கல் பார்ட்னர். அவர்கள்தான் எங்களது இணையதளத்தை பராமரிக்கின்றனர். சிஎஸ்கே அணிக்காக பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் வெப் டிவியும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவற்றை பின்னர் அறிவிப்போம்.

இம்முறை ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெறுதவற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதே? இதில் உங்களது நிலைப்பாடு என்ன?

அதுபோன்று ஒரு பேச்சு உள்ளது. இந்த விவகாரத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் இரு போட்டிகள் அமைவதை பல்வேறு அணிகள் விரும்பவில்லை. இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குவதுதான் ரசிகர்களின் வருகைக்கு சரியாக இருக்கும். 5.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தால் அடுத்த ஆட்டம் பாதிக்கும். ஸ்பான்சர்கள் தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நேரத்தை மாற்ற எங்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடிய வீரர்களுக்கு எதிர்கால வாய்ப்பு எப்படி உள்ளது?

அவர்கள் மிகவும் இளம் வீரர்கள். உடனடியாக அவர்களால் ஐபிஎல் போன்ற தொடர்களில் இடம் பெற முடியாது. தொடர்ச்சியாக பல்வேறு மட்டத்தில் சிறந்த திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐபிஎல் அணிகளுக்காக தேர்வு செய்யப்படலாம். வாஷிங்டன் சுந்தர் ஜூனி யர் சூப்பர் கிங்ஸ் தொடரில் விளையாடியவர்தான்.

சிஎஸ்கே அணிக்காக வீரர்களின் திறன் கண்டறியும் தேர்வு முகாம்கள் ஏதும் நடத்தப்படுகிறதா?

பயிற்சி முகாம் நடத்தவில்லை. உள்ளூர் போட்டிகளை நன்கு கூர்ந்து கவனிக்கிறோம். இதன் அடிப்படையில் திறன் உள்ள வீரர்கள் பட்டியலை தயார் செய்கிறோம். அவற்றில் இருந்துதான் வீரர்களை தேர்ந்தெடுக்கிறோம்.

தற்போதைய அணியில் ராஞ்சியை சேர்ந்த மோனுகுமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் தோனியின் உள்ளீடு இருந்ததா?

ஆமாம். வேகப்பந்து வீச்சாளரான அவரை, தோனிதான் பரிந்துரை செய்தார். வளர்ந்து வரும் வீரரான அவரை, எதிர்கால நோக்கில் தேர்வு செய் துள்ளோம்.

தமிழகத்தை தவிர்த்து பிறமாநில இளம் வீரர்கள் மீது ஏன் அதிக கவனம்?

நாங்கள் ஏற்கெனவே அவர்களை, அடையாளம் கண்டு வைத்திருந்தோம். அந்த வகையிலேயே தேர்வு செய்துள்ளோம்.

ஏலத்துக்கு முன்னதாக எப்படி திட்டமிட்டீர்களோ அதே அணியை பெற முடிந்துள்ளதா?

90 சதவீதம் நாங்கள் திட்டமிட்டபடியிலான அணியையே பெற்றுள்ளோம். ஒரு சில வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது உண்மைதான்.

குறுகிய வடிவிலான போட்டிகளில் தற்போது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்களே? சிஎஸ்கே அணியில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்கள் யார்?

இம்ரன் தகிர், கரண் சர்மா ஆகியோர் சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்கள். டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் இம்ரன் தகிர்தான். கரண் சர்மா, கடந்த சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணிகளுக்காக சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். இவர்கள் மீது நம்பிக்கை உள்ளது.

ஹர்பஜனை கடந்த ஆண்டு மும்பை அணி சரியாக பயன்படுத்தவில்லை. இளம் வீரரான கிருனல் பாண்டியாவைத்தான் அதிகம் நம்பினர். ஒரு சில ஆட்டங்களில் ஹர்பஜன் சிங் அதிக ரன்களையும் வழங்கினார். இந்த சூழ்நிலையில் அவரை, நீங்கள் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். அவர் இந்த முறை ஜொலிப்பாரா?

ஹர்பஜன் சிங், 10 வருடங்களாகவே மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். ஒரு சில ஆட்டங்களில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். விக்கெட் கைப்பற்றுவதை மட்டுமே பார்க்கக்கூடாது. ரன்களை வழங்குவதில் சிக்கனமாகவும், எந்த சூழ்நிலையிலும் பந்து வீசக்கூடியவராகவும் ஹர்பஜன் உள்ளார். இதையும், அவரது அனுபவத்தையுமே நாங்கள் பார்க்கிறோம்.

ஏலத்தில் எந்த வீரரை எடுக்க அதிகம் போட்டி போட வேண்டிய நிலை இருந்தது?

ஷர்துல் தாக்கூர், தீபக் ஷகார், ஜெயதேவ் உனத்கட் ஆகியோரை எதிர் நோக்கினோம். உனத்கட்டை பெற ரூ.10.50 கோடி வரை சென்றோம். ஆனால் அதிக விலைக்கு மற்றொரு அணியால் எடுக்கப்பட்டு விட்டார். இதேபோல் ஆன்ட்ரூ டையை எடுக்க விரும்பினோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்