IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | அணியிலிருந்து பும்ரா விடுவிப்பு; கே.எல்.ராகுல் விளையாடவில்லை

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்த போட்டியில் கே.எல்.ராகுலும் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தொடரின் 4-வது போட்டி ராஞ்சி நகரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஜஸ்பிரீத் பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக 17 விக்கெட்களை வீழ்த்தி உள்ள பும்ரா, அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

தசைப் பிடிப்பு காரணமாக இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கே.எல்.ராகுல், நான்காவது போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழு உடற்தகுதியை எட்டும் நிலையில் தரம்சாலா போட்டியில் பங்கேற்பார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஞ்சி போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கே கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE