ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது தமிழக அணி

By செய்திப்பிரிவு

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் பஞ்சாப் இடையிலான ஆட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. பாபா இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் குவித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பஞ்சாப் அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஃபாலோ ஆன் பெற்ற பஞ்சாப் அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டத்தை பஞ்சாய் வீரர்கள் நேஹல் வதேரா 103 ரன்களுடனும், மன்தீப் சிங் 14 ரன்களுடனும் தொடங்கினர்.

சாய் கிஷோர், அஜித் ராம், பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோரது அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வதேரா 109 ரன்கள் எடுத்தார்.

சாய் கிஷோர், அஜித் ராம், பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி விளையாடியது. 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து தமிழக அணி வெற்றி கண்டது. சுரேஷ் லோகேஷ்வர் 19 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். என்.ஜெகதீசன் 26, பிரதோஷ் ரஞ்சன் பால் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட தமிழக அணி ‘சி’ பிரிவில் 28 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறியது.

கால் இறுதியில் தமிழகம் - சவுராஷ்டிரா அணிகள் வரும் 23-ம் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டம் கோவையில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE