மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் காலத்தில் இங்கிலாந்தின் மெகா தோல்வியும், ஜெய்ஸ்வால் எழுச்சியும்!

By ஆர்.முத்துக்குமார்

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றியைப் பெற்று இந்திய அணியின் ஆகப் பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது. இங்கிலாந்தின் பார்வையில் பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம், அதாவது ‘பாஸ்பால்’ என்று பிரபலப்படுத்தப்பட்ட அணுகுமுறையிலான காலக்கட்டத்தில் இங்கிலாந்தின் மிகப்பெரிய தோல்வி இது.

பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஜடேஜா, ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ஷுப்மன் கில் பிரமாதப்படுத்த, பவுலிங்கில் வழக்கம் போல் பும்ரா இந்த டெஸ்ட்டில் சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா கலக்கினர். ஜடேஜா தன் சொந்த மண்ணில் சதம் கண்டதோடு 5 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்ஸில் கைப்பற்றினார். இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஒரே ஆறுதல் பென் டக்கெட் எடுத்த அதிரடி சதம் மட்டுமே.

இதோடு ஜடேஜா, ஜோ ரூட்டை 5வது முறையாக வீழ்த்தியதும் நடந்தது. மொத்தம் 4 எல்.பி.டபிள்யூ என்பது எதிரணிக்கு பெரிய பின்னடைவுதான், ஜாக் கிராலி நிச்சயமாக நாட் அவுட். ஜோ ரூட்டிற்கு ஆஃப் ஸ்டம்பிற்கு புறப்பகுதியைப் பந்து தட்டுவதாக ரீப்ளேயில் காட்டப்பட்டது. இதற்கும் சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு அளிக்கப்படவில்லை, கையை உயர்த்தினர். பேர்ஸ்டோவுக்கும் எல்.பி.. தீர்ப்பு, அவர் ரிவியூ செய்யவில்லை முதல் பார்வைக்கு பிளம்ப் எல்.பி என்று தெரிந்ததால் அவர் ரிவியூ செய்யவில்லை. பார்க்கும் நமக்கும் அப்படித்தான் பட்டது, ஆனால் ரீப்ளேயில் ஆஃப் ஸ்டம்பின் வெளிப் பகுதியில் அடிப்பதாக ரீப்ளே காட்டியது,

இவையெல்லாம் மார்ஜினலான அவுட், உறுதியான அவுட் தீர்ப்பாக மாறியுள்ளது. இவையெல்லாம் கொடுக்கவில்லை என்றால் இங்கிலாந்து என்ன செய்திருக்கப் போகிறது, ஒன்றும் இல்லை. 122 என்பது 222 ஆக இருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் தோல்வி தோல்விதான், ஆனால் நடுவர்கள், மூன்றாவது நடுவர், ஹாக் ஐ போன்றவற்றில் பாரபட்சம் இருப்பதாக பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டது பரிசீலனை செய்யப்பட வேண்டிய விஷயம் என்பதை அறிவுறுத்தியது. இதையே தோனி சொன்னால் ஆகா ஓகோ பேஷ் பேஷ் என்று சொல்லும் ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ் சொன்னால் அழுகை, புலம்பல் என்று எத்தனை நாட்களுக்கு கூற முடியும்?

ஜோ ரூட் பும்ரா பந்தை தடுத்தாடிய போது, பும்ரா ஸ்டம்ப் மைக் அருகே சொன்னது இது தான், “இப்போது உன்னால் அடிக்க முடியவில்லை” என்று ‘முடிந்தால் அடித்துப் பார்’ என்ற உட்குறிப்புடன் கூறியது தெரிந்தது. காரணம் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் பேன்சி ஷாட் ஆடினார், பும்ரா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அவுட் ஆனார். இது பும்ராவை காயப்படுத்தியுள்ளது, ஸ்டம்ப் மைக்கில் அவர் கூறிய சொற்களில் வெளிப்பட்டது.

பென் டக்கெட்ட், ஜாக் கிராலி 2018 முதல் 2023 வரை இங்கு வந்து ஆடிய அணிகளின் மற்ற தொடக்க வீரர்களைக் காட்டிலுமே சிறந்த தொடக்க வீரர்கள் ஆவார்கள், காரணம் 4 ‘அரைசத பிளஸ்’ தொடக்கக் கூட்டணியை இந்தத் தொடரில் சாதித்ததே, ஆனால் இது காமெடி ரன் அவுட்டில் பென் டக்கெட் வெளியேற்றத்துடன் மாபெரும் சறுக்கலையும் தொடங்கி வைத்தது.

ஒரு கட்டத்தில் ஸ்கோர் 50-ல் இருக்கும் போதே ரூட், ஸ்டோக்ஸ், ரெஹான் அகமட் ஆட்டமிழந்து 50/7 என்று ஆனது இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2022-ம் ஆண்டு லார்ட்ஸில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததை விடவும் மிகப்பெரிய பாஸ்பால் காலக்கட்ட தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து. இது ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் 21 டெஸ்ட்களில் 6வது தோல்விதான் என்றாலும் இந்தத் தோல்வியின் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்பதை அறிவுறுத்தியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் பித்துப்பிடித்த ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டினால் 224/2லிருந்து 319க்கு ஆல் அவுட் ஆன பித்தத்திலிருந்து இங்கிலாந்து தெளியவில்லை என்பது திண்ணம். அந்த ஷாட்டும் தேவையில்லாத ஷாட், பேட்டிங் பிட்சில் இந்திய அணிக்கு 126 ரன்களை முன்னிலைக் கொடுத்ததும் தேவையற்றதே.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எழுச்சி மிகு தாக்கம்: முந்திய நாள் 104 ரன்களில் அவர் கிராம்ப்ஸ் வந்து பெவிலியன் சென்றவர் நேற்று மீண்டும் இறங்கினார். இறங்கியது முதல் என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை வெளுத்துக் கட்டி விட்டார். இவரும் சர்பராஸ் கானும், என்ன உங்களுக்குத்தன் பாஸ்பால் அதிரடி வருமா இதோ பார் நாங்கள் பாஸ்பாலையும் கடந்து விட்டோம் என்று 26 ஓவர்களில் 175 ரன்களை விளாசித்தள்ளினர்.

அதாவது ஒருமுறை நடுவர் லைட் சரியில்லை முடித்துக் கொள்வோம் என்று கேட்ட போது கேப்டன் கங்குலி இல்லை ஆடுவோம் என்று ஆடி இவரும் சச்சின் டெண்டுல்கரும் கிட்டத்தட்ட 10-11 ஓவர்களி 105 ரன்களை இங்கிலாந்தில் அடித்து நொறுக்கியதைப் போன்ற அதிரடியை வெளிப்படுத்தினர் சர்பராஸ் கானும், ஜெய்ஸ்வாலும்.

அதுவும் வெடரன் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனே இந்த அதிரடிக் கரும்பு மெஷினில் சிக்கி சக்கையாகிப் போனார், ஜெய்ஸ்வால் இவரை ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார். 21 ரன்கள் ஒரே ஓவரில், அதாவது 2013ம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி ஒரே ஓவரில் இவரை 28 ரன்கள் விளாசியதற்குப் பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் வாங்கிய செம அடியாகும் இது. ஜோ ரூட்டை இரண்டு சிக்சர்கள் விளாசி ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 12 சிக்சர்களுக்கான சாதனையை சமன் செய்தார்.

மறு முனையில் சர்பராஸ் கான் ரேஹன் அகமதுவை 6,4, 6 என்று விளாசினார். பாஸ்பால் சிகிச்சையை இங்கிலாந்துக்கே அளித்தனர். 2 டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டைச் சதங்களை ஜெய்ஸ்வால் எடுத்து பெரிய இன்னிங்ஸை தன்னால் ஆட முடியும் என்பதை நிரூபித்துள்ளார். மிடில் ஆர்டரில் சர்பராஸ் கானின் வரவு இனி உலக பவுலர்களுக்கு பெரிய அச்சுறுத்தல்தான். ரோஹித் சர்மா கேப்டன்சியில் உறுதி தெரிகிறது, பதற்றம் தெரியவில்லை. 2013-க்குப் பிறகு உள்நாட்டில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததில்லை.

பாஸ்பால் என்று கதறும் இங்கிலாந்து 5 சிக்சர்களையே அடிக்க இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது. இங்கிலாந்து பாவம் எப்போதும் புதிதாக ஒன்றைக் கண்டுப்பிடித்ததாக மார்த்தட்டிக் கொண்டு அதிலேயே மடிந்து வருவதுதான் வரலறாகி வருகிறது, இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெல்லப்பார்ப்போம் என்று கூறியிருப்பது நகைமுரணா அல்லது பகை முரணா என்பது போகப்போகவே தெரியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்