ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் | இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை!

By செய்திப்பிரிவு

ஷா ஆலம்: நடப்பு ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளது. தாய்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்த தொடர் மலேசியா நாட்டின் ஷா ஆலம் நகரில் நடைபெற்றது. ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, அன்மோல் ஹார்ப் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடியும் இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் பட்டம் வெல்ல உதவினர். இதற்கு முன்னர் இந்த தொடரில் இந்திய ஆடவர் அணி, கடந்த 2016 மற்றும் 2020-ல் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சுற்றில் இந்திய அணிக்காக முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து, சுபனிடா கேத்தோங்கை 21-12, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, 21-16, 18-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

அரை இறுதியில் ஜப்பான் நாட்டின் நோசோமி ஒகுஹாராவை வீழ்த்திய அஷ்மிதா சாலிஹா, 3-வதாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். தொடர்ந்து 4-வதாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா ஆகியோர் தோல்வியை தழுவினர். இதனால் 2-2 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.

வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில் அன்மோல் ஹார்ப் வெற்றி பெற்றார். அதன் மூலம் 3-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. தொடர்ந்து இந்திய அணியினர் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இந்த வெற்றி நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தனக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளதாக சிந்து தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE