த்ரில்’ வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இந்தியா

By ராமு

கேப்டவுன் டி20 போட்டியில் பரபரப்பான இறுதிக் கட்டத்துக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. விராட் கோலி இந்தப் போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா கேப்டன்சி செய்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் பின்கள அறிமுக வீரர் கிறிஸ்டியன் ஜோங்கர் வெளுத்துக் கட்டினார், 24 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 49 ரன்களை விளாச இந்திய அணியிடத்தில் இவரது அதிரடி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, ஆனாலும் போதவில்லை கடைசியில் புவனேஷ்வர் குமார் தன் அனுபவத்தைக் காட்ட இந்திய அணி 7 ரன்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து அருகில் வந்து தோற்றது. விராட் கோலி முதுகு வலி காரணமாக ஆட முடியாமல் போக ரோஹித் சர்மா கேப்டன்சி பொறுப்பேற்றார். இந்திய அணியில் சாஹல் இல்லை அவருக்குப் பதில் அக்சர் படேல். 1 ஓவர் வீசி 16 ரன்கள் கொடுத்தார், ஒரு ஓவர் வீசுவதற்காக ஒரு மாற்றம். தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்து விட்டு ஹர்திக் பாண்டியா, தோனிக்கு முன்னுரிமை. ஆனால் தோனியும் பாண்டியாவும் தடவ தினேஷ் கார்த்திக்தான் கடைசியில் ஒரு அபாரமான லேட் கட் பவுண்டரி ஒரு லாங் ஆஃப் பவுண்டரி என்று 3 பவுண்டரிகளுடன் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஸ்கோரை 172 ரன்களுக்கு உயர்த்தினார். ஒரு விதத்தில் இந்த 13 முக்கிய ரன்கள்தான் இந்திய வெற்றியைத் தீர்மானித்தது எனலாம்.

தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்தும் போது அநியாயத்திற்கு மந்தமாக ஆடி பவர் பிளேயில் 25 ரன்களையும் 10 ஓவர்களில் 52 ரன்களையும் எடுத்தனர். இதனால் 21 பந்துகளில் 59 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அறிமுக வீரர் கிறிஸ்டியன் ஜோங்கர், பர்ஹான் பெஹார்டீன் 9 பந்துகளில் 51 ரன்களை விளாசி அதிர்ச்சி அளித்தனர். ஷர்துல் தாக்குர் வீசிய கடைசி ஓவரில் ஜோங்கர் 18 ரன்கள் விளாசினார். இதனால் அவர் 3 ஒவர்களில் 17 ரன்கள் என்ற நிலையிலிருந்து 4 ஓவர்கள் 35 ரன் ஒரு விக்கெட் என்று அனாலிசிஸ் காலியானது.

பும்ரா ஓவரில் பெஹார்டீன், ஜோங்கர் இணைந்து 16 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது, பிறகு கடைசி 3 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் குமார் பந்துகளை அடிப்பது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் தென் ஆப்பிரிக்கா தோற்றது, காரணம் முதல் 10 ஓவர்க்ளில் சொதப்பிய சொதப்பல்தான்.

இந்திய அணியில் ஷிகர் தவண் 47 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவரானார், ஆனால் இதற்கும் இருமுறைக் காரணமானார் தப்ரைஸ் ஷம்ஸி. ஷிகர் தவன் 9 ரன்களில் இருந்த போது கிறிஸ் மோரிஸ் பந்தை கட் செய்ய ஷார்ட் தேர்ட்மேனில் கேட்சை விட்டார் ஷம்ஸி. பிறகு ஷிகர் தவன் 34 ரன்களில் இருந்த போது ஏரோன் பாங்கிசோ பந்தை சரியாக ஆடவில்லை பந்து இம்முறை ஷார்ட் பைன் லெக் திசையில் ஷம்சியிடம் கேட்சாகச் செல்ல அதையும் விட்டார் ஷம்சி. இவரை எங்கு நிறுத்துவது என்பதை தென் ஆப்பிரிக்கா முடிவெடுக்க வேண்டும். இடையில் ஷம்சி பந்தில்தான் தனது 29வது பந்தில் தவன் முதல் பவுண்டரியை அடித்தார்.

சுரேஷ் ரெய்னா தீவிரத்தைக் காட்டினார். தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பவுலர் ஜூனியர் டாலாவை சிக்ஸ் அடித்தார், ஆண்டில் பெலுக்வயோவை இரண்டு பவுண்டரிகள் அடித்தார் பிறகு மோரிஸ், டுமினியின் ஷார்ட் பிட்ச் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து ஷம்சி பந்தில்தான் ஆட்டமிழந்தார்.

மணீஷ் பாண்டே ஒரு அருமையான சிக்சரை ஷம்சி பந்தில் அடித்தார். ஆனால் அதிக நேரம் நிற்கவில்லை, 13 ரன்களில் ஜூனியர் டாலாவின் ஷார்ட் பிட்ச் பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்தார். அந்த ஓவரை டாலா டைட்டாக வீச, அடுத்த ஓவரில் பெலுக்வயோ பவுண்டரி கொடுக்காமல் 8 ரன்களையே கொடுத்தார். இதனால் அழுத்தம் அதிகரிக்க ஷிகர் தவண் அடுத்த ஓவரில் ரன் அவுட் ஆனார். டாலாவின் அபாரமான நேர் த்ரோ ஸ்டம்பைத் தாக்க தவனின் 2வது ரன் முயற்சி ரன் அவுட்டில் முடிந்தது. 4 ஓவர்களில் 25 ரன்கள்தான் வந்தது. 17 ஓவர் முடிவில் இந்திய அணி 136/4. கிறிஸ் மோரிஸ் கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

தினேஷ் கார்த்திக்கின் 3 பவுண்டரிகளால் இந்திய அணி 172 ரன்களை எட்டியது. ஜூனியர் டாலா 3 விக்கெட்டுகளையும் மோரிஸ் 2 விக்கெட்டையும் கைப்பற்ற பாங்கிசோ 2 ஒவர்களில் 13 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார்.

தென் ஆப்பிரிக்கா மந்தமான தொடக்கம்:

தொடக்க வீரர் ரீசா ஹென்ரிக்சை புவனேஷ்வர் குமார் தன் விரல் பந்து மூலம் வீழ்த்த டேவிட் மில்லர், டுமினி ஆகியோர் இணைந்தனர். 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்த மில்லர் ரெய்னாவிடம் அக்சர் படேல் கேட்ச் எடுக்க வெளியேறினார். 10வது ஓவரின் முதல் பந்தில் 45/2. மில்லர் ஆட்டமிழந்தவுடன் வெற்றிக்கான ரன் விகிதம் ஓவருக்கு 12 என்று ஆனது. டுமினி தன் முதல் பவுண்டரியையே 20வது பந்தில்தான் அடித்தார், கடைசியில் அக்சர் படேல் தயவில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார். மிகப் பிரமாதமான கவர் டிரைவ் பவுண்டரி மூலம் 38 பந்துகளில் டுமினி அரைசதம் எடுத்தார். பிறகு தாக்கூரின் ஸ்லோ பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து 55 ரன்களில் வெளியேற சிக்கல் உருவானது, இந்நிலையில்தான் ஜோங்கர், பெஹார்டீன் இணைந்து 9 பந்துகளில் 51 ரன்களை விளாசி அருகில் வந்து தோற்றனர்.

ஜோங்கர் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 49 ரன்களையும் பெஹார்டீன் 6 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார். புவனேஷ் குமார் 24 ரன்களுக்கு 2 விக்கெட். ஹர்திக் பாண்டியா சிக்கனமாக வீசி 22 ரன்களுக்கு 1 விக்கெட். ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் புவனேஷ்வர் குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்