T20 WC 2024 | ‘இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துவார்’ - ஜெய் ஷா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ராஜ்கோட்: எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு மூன்றே மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடி உள்ளார். அவருக்கு பதிலாக இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வந்தார். அவர் விளையாடாத நேரங்களில் அணியை மாற்று வீரர்கள் வழிநடத்தினர். இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் பங்கேற்பது குறித்து டாக் ஒரு பக்கம் நிலவி வந்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் வழிநடத்தி வந்தார். அவர் தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. இந்த சூழலில் எதிர்வரும் சீசனில் மும்பை அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என அந்த அணி அறிவித்தது. அந்த அணியின் பயிற்சியாளர் பவுச்சர் அதனை ஆதரித்து பேசி இருந்தார். இந்த சூழலில் ஜெய் ஷா இதனை தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நாம் இழந்தோம். ஆனால், தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றோம். நடப்பு ஆண்டில் பார்படோஸில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வேண்டும்” என ஜெய் ஷா தெரிவித்தார். டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE