ஜூன் மாதத்துக்குப் பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம்: தமிழக அரசு தகவல் @ சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஜூன் மாதத்துக்குப் பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். மருத்துவமனையும் இதற்கு அனுமதி அளித்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழக அரசால் ஒத்திவைக்கப்படுகிறது” அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து டிச.8-ம் தேதி, மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு. சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் லாபமும் இல்லை எனவே இந்த போட்டிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் மாதத்துக்குப் பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். மருத்துவமனையும் இதற்கு அனுமதி அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை பிறப்பிப்பதாக கூறி, அன்றைய தினத்துக்கே வழக்கை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE