IND vs ENG: ராஜ்கோட் டெஸ்ட் | கே.எல்.ராகுல் விலகல் - தேவ்தத் படிக்கலுக்கு அணியில் வாய்ப்பு!

By செய்திப்பிரிவு

ராஜ்கோட்: வரும் வியாழக்கிழமை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகி உள்ளார். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பெறும் வாய்ப்பை தேவ்தத் படிக்கல் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்த தொடரின் மூன்றாவது போட்டி 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த சூழலில் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. விராட் கோலி இந்த தொடரில் விளையாடவில்லை.

இரண்டாவது போட்டியில் இருந்து விலகிய கே.எல்.ராகுல், ராஜ்கோட் போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்கான மேட்ச் ஃபிட்னஸை பெறாத காரணத்தால் அவர் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அணியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தரமான ஃபார்மில் உள்ள 23 வயதான இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் அவர், மூன்று சதங்களை பதிவு செய்துள்ளார். இதில் தமிழகத்துக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் 151 ரன்கள் அவர் எடுத்திருந்தார். இதோடு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 105 ரன்கள் எடுத்திருந்தார். அதன் காரணமாக அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ். பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா, தேவ்தத் படிக்கல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE