இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகல்

By செய்திப்பிரிவு

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச், இடது முழங்கால் வலி காரணமாக விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இடது முழங்கால் காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச், எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இருப்பினும் ஜேக் லீச்சுக்குப் பதிலாக மாற்று வீரர் யாரையும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது ஜேக் லீச் காயமடைந்தார். இதையடுத்து விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், தொடரின் எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

தற்போது இங்கிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பயிற்சி பெற்று வருகிறது. அங்கிருந்து அவர் நேராக இங்கிலாந்து செல்கிறார். அங்கு அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை வழங்குவர் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 32 வயதாகும் ஜேக் லீச் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 126 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE