மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

அடிலெய்ட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஹோபர்ட்டில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அடிலெய்ட் நகரில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களைக் குவித்தது. அணியில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 55 பந்துகளைச் சந்தித்து 120 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரிகளும், 8 இமாலய சிக்ஸர்களும் அடங்கும்.

டேவிட் வார்னர் 22, ஜோஷ் இங்லிஸ் 4, மிட்செல் மார்ஷ் 29, ஸ்டோயினிஸ் 16 ரன்கள் எடுத்தனர். டிம்டேவிட் 14 பந்துகளில் 31 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்களையும், அல்சாரிஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட்ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்குஇந்தியத் தீவுகள் அணி விளையாடியது. பிரண்டன் கிங் 5, ஜான்சன் சார்லஸ் 24, ரோவ்மன் பாவெல் 63, ஜேசன் ஹோல்டர் 28 ரன்கள் எடுத்தனர். இறுதியாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

அபாரமாக ஆடி சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி வரும் 13-ம் தேதி பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE