U19 WC Final | இந்தியாவை வீழ்த்திய ஆஸி; 14 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய சாம்பியன் கனவு

By செய்திப்பிரிவு

பெனோனி: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அந்த அணி. கடைசியாக கடந்த 2010-ல் இளையோர் உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது அந்த அணி.

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. மொத்தம் 41 போட்டிகள். இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டது. இந்த தொடரில் இந்திய அணி குரூப்-ஏ மற்றும் சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் 1-லும் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

குரூப்-சி மற்றும் சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் 2-லும் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக ஹாரி 42 ரன்கள், ஹக் வெய்ப்ஜென் 48 ரன்கள், ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள், ஆலிவர் பீக் 46 ரன்கள் எடுத்திருந்தனர்.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. 91 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆதர்ஷ் சிங் 47 ரன்கள் மற்றும் முருகன் அபிஷேக் 42 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தனர். 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. ஆஸ்திரேலிய அணி சார்பில் மஹ்லி, ராஃப் மேக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்களில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE