ரஞ்சியில் தமிழக அணி தடுமாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் - கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த கர்நாடகா அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது.

மயங்க் அகர்வால் 20, ரவிக்குமார் சமர்த் 57, நிகின் ஜோஸ் 13, மணீஷ் பாண்டே 1, கிஷான் பெதரே 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனது 6-வது சதத்தை விளாசிய தேவ்தத் படிக்கல் 151 ரன்களும், ஹர்திக் ராஜ் 35 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி மேற்கொண்டு 78 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 5 விக்கெட்களையம் இழந்தது.

தேவ்தத் படிக்கல் (151) மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காத நிலையில் பிரதோஷ் ரஞ்சன் பால் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். ஹர்திக் ராஜ் 96 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் அவருக்கு உறுதுணையாக விளையாடிய நிவாஸ் சரத் 45 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். முடிவில் கர்நாடக அணி 119.4 ஓவர்களில் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தமிழக அணி தரப்பில்அஜித் ராம் 4, சாய் கிஷோர் 3, முகமது 2, பிரதோஷ் ரஞ்ஜன் பால் ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து விளையாடிய தமிழக அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. விமல் குமார் 14, நாராயண் ஜெகதீசன் 40, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 5, சுரேஷ் லோகேஷ்வர் 3,விஜய் சங்கர் 6, பூபதி குமார் 8, கேப்டன் சாய் கிஷோர் 2 ரன்களில் வெளியேறினர். 2-வது நாள்ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 56 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.

பாபா இந்திரஜித் 35, முகமது 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கர்நாடகா அணி தரப்பில் சசிகுமார் 3, ஹர்திக் ராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 237 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE