ஐபிஎல் அப்டேட் | மே.இ.தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியது லக்னோ

By செய்திப்பிரிவு

லக்னோ: மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியதாக லக்னோ அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை வாங்கியதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு மார்க் வுட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பின்வாங்க வைத்தது. இதன்தொடர்ச்சியாக மாற்றுவீரரை தேடும் முயற்சியில் இறங்கிய லக்னோ அணி நிர்வாகம் தற்போது ஷமர் ஜோசப்பை கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அறிமுகமானார் ஷமர் ஜோசப். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே ஸ்டீவன் ஸ்மித்தை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் ஷமர். அறிமுக டெஸ்ட்டிலேயே பேட்டிங்கில் கடைசி வீரராக இறங்கி 36 ரன்களையும் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

தொடர்ந்து காபா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணி வரலாற்று வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார் ஷமர். 216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்றது.

காபா டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் காரணமாக கால் விரலில் காயத்தை எதிர்கொண்டார் ஷமர். இதனால் அவர் களமிறங்க மாட்டார் எனக் கூறப்பட்டது. பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, 4வது நாளில் களம் இறங்கி ஆஸ்திரேலியாவின் 'ஸ்டார்' பேட்டிங் யூனிட் மீது ஒரு களேபரமே நிகழ்த்திவிட்டார் என்னும் அளவுக்கு சிறப்பான ஸ்பெல்லை வீசி அசர வைத்தார்.

கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் என காபா டெஸ்டில் ஆஸி.யின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசியாக விழுந்த 8 விக்கெட்களில் 7 விக்கெட்டை கைப்பற்றினார் ஷமர் ஜோசப். இந்த வெற்றியானது 27 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகும்.

கடைசியாக 1997-ல் நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை அந்த அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால் கிரிக்கெட் உலகின் பேசுபொருள் ஆனார். தற்போது ஐபிஎல் தொடரிலும் கால்பதிக்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE