முதல் டி20-ல் மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.: டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசல்

By செய்திப்பிரிவு

ஹோபர்ட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. தொடக்க வீரரான டேவிட் வார்னார் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஹோபர்ட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு213 ரன்கள் குவித்தது. தனது 100-வது சர்வதேச டி 20 போட்டியில் களமிறங்கிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் 36 பந்துகளில், 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 70 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் இங்லிஷ் 25 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 93 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 15, கிளென் மேக்ஸ்வெல் 10, மார்கஸ் ஸ்டோயினிஸ் 9, மேத்யூ வேட் 21, சீன் அபாட் 0 ரன்களில் வெளியேறினர். டிம் டேவிட் 17 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களும், ஆடம் ஜாம்பா 4 ரன்களும் சேர்த்துஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஆந்த்ரே ரஸ்ஸல் 3, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

214 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 37 பந்துகளில், 7 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 51 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 25 பந்துகளில், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 42 ரன்களும் சேர்த்தனர். நிகோலஸ் பூரன் 18, கேப்டன் ரோவ்மன் பவல் 14, ஷாய் ஹோப்16, ஆந்த்ரே ரஸ்ஸல் 1, ஷெர்பேன் ரூதர்போர்டு 7, ரோமாரியோ ஷெப்பர்டு 2 ரன்களில்நடையை கட்டினர். இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், அகீல் ஹோசைன் 5 பந்துகளில் 7 ரன்களும் சேர்த்தனர்.

சீன் அபோட் வீசிய கடைசி ஓவரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஜேசன் ஹோல்டர் அடுத்த பந்தில் ரன் சேர்க்காத நிலையில் 3-வது பந்தைபவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் 3 ரன்கள்சேர்க்கப்பட்டன. இதன் பின்னர் 2 பந்துகளில்14 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணியால் 2 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில்ஆடம் ஜாம்பா 3, மார்கஸ் ஸ்டோயினிஸ் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் தேர்வானார். 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (11-ம் தேதி) பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறுகிறது.

‘3 வடிவிலும் 100’: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியானது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கு 100-வது சர்வதேச டி 20 ஆட்டமாக அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி 20 என அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் 100 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும், உலக அளவில் 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் டேவிட் வார்னர்.

இந்த வகையில் நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர், இந்தியாவின் விராட் கோலி ஆகியோரும் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடி உள்ளனர். 37 வயதான டேவிட் வார்னர் தனது 100-வது டி 20 ஆட்டத்தில் 22 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 25-வது அரை சதமாக அமைந்தது. அவர், 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்