ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | கர்நாடகா 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவிப்பு: தேவ்தத் படிக்கல் 151* ரன்கள் விளாசல்

By செய்திப்பிரிவு

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா அணி முதல்நாளில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 151 ரன்கள் விளாசினார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் - கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்தகர்நாடகா அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான மயங்க் அகர்வால் 44 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோர் பந்தில் போல்டானார்.

இதையடுத்து களமிறங்கிய இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல், ரவிக்குமார் சமர்த்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய ரவிக்குமார் சமர்த் 159 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 57ரன்கள் எடுத்த நிலையில் அஜித் ராம் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நிகின் ஜோஸ் களமிறங்கினார்.

சீராக ரன்கள் சேர்த்த தேவ்தத் படிக்கல் முதல்தர கிரிக்கெட்டில் தனது 6-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த ரஞ்சி சீசனில் அவருக்கு இது 3-வது சதமாக அமைந்தது. 3-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. நிகின்ஜோஸ் 41 பந்துகளில் 13 ரன்கள்சேர்த்த நிலையில சாய் கிஷோர் பந்தில், விக்கெட் கீப்பர் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே 1 ரன்னில் அஜித் ராம் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து கிஷன் பெதரே 3 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் நடையை கட்டினார். 6-வதுவிக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் ராஜ் நிலைத்து நின்று விளையாடியதால் கர்நாடகா அணி மேற்கொண்டு விக்கெட்டை இழக்கவில்லை.

தேவ்தத் படிக்கல் 216 பந்துகளில், 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 151 ரன்களும், ஹர்திக்ராஜ் 66 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3, அஜித் ராம் 2 விக்கெட்களை கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க இன்று 2-வதுநாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது கர்நாடகா அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE