“ஒட்டுமொத்த அணியின் முன்பு மெக்கலமிடம் மன்னிப்புக் கேட்டேன்” - ரகசியம் பகிர்ந்த கம்பீர்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட சமயத்தில் சக வீரர் பிரெண்டன் மெக்கலமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா இரண்டு முறை டைட்டில் வெல்ல காரணமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் கவுதம் கம்பீர். 2011 முதல் 2017 வரை அவர் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். கொல்கத்தா அணியில் இணைந்த இரண்டாவது வருடத்தில் (2012) சென்னை அணியை ஃபைனலில் வீழ்த்தி கொல்கத்தா அணியை வெல்ல வைத்தார் கம்பீர். இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லத்துக்கு பதிலாக பிரட் லீயை தேர்வு செய்திருப்பார் கம்பீர். அப்போது பிரெண்டன் மெக்கல்லம் ஃபார்மில் இருந்தும் பிரட் லீயை தேர்வு செய்த காரணத்தையும், அதற்காக மெக்கல்லத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதையும் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார் கம்பீர்.

2012 சீசனின் இறுதிப் போட்டியில் நடந்த சம்பவங்கள் குறித்து கம்பீர் பேசுகையில், "சேப்பாக்கத்தில் நடந்த அந்த இறுதிப் போட்டிக்கு புறப்படுவதற்கு முன், ஒட்டுமொத்த அணியினர் முன்னிலையில் பிரெண்டன் மெக்கலமிடம் நான் மன்னிப்புக் கேட்டேன். 'அணியில் உங்களை எடுக்காததுக்கு உண்மையில் நான் வருந்துகிறேன். இந்த முடிவு உங்களின் பெர்பாமென்ஸ் காரணமாக அல்ல. நமது ஓப்பனிங் காம்பினேஷன் காரணமாக எடுத்துள்ளேன்" என்று கூறி மெக்கலமிடம் மன்னிப்பு கேட்டேன். யாரும் இதை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒட்டுமொத்த அணிக்கு முன்பாக அவரிடம் மன்னிப்பு கேட்கும் தைரியம் எனக்கு இருந்தது. மன்னிப்பு கேட்பதில் தவறில்லை.

ஒருவேளை நான் மன்னிப்பு கேட்காமல் இருந்திருந்தால் எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். தலைமைத்துவம் என்பது பாராட்டுவது மட்டுமல்ல. மன்னிப்பு கேட்பதும் தான். சில சமயங்களில் சிலருக்கு இப்படியான செயல்கள் மோசமாக தோன்றலாம். ஆனால், என்னை பொறுத்தவரை நீங்கள் ஒரு தலைவராக (லீடர்ஷிப்) வளர்வதில் இப்படித்தான் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE