தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 281 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி

By செய்திப்பிரிவு

மவுன்ட் மவுங்கனுயி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.

மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 240, கேன் வில்லியம்சன் 118 ரன்கள் விளாசினர். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 72.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. 349 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து அணியானது தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடியது. 3-வது நாள்ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

டாம் லேதம் 3, டேவன் கான்வே 29, ரச்சின் ரவீந்திரா 12, கேன் வில்லியம்சன் 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் 11, டாம் பிளண்டல் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் நியூஸிலாந்து அணி மேற்கொண்டு பேட் செய்யாமல் டிக்ளேர் செய்வதாக அறிவித்ததுடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு 529 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பெரிய அளவிலான இலக்கை துரத்திய 2-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க அணி 80 ஓவர்களில் 247 ரன்கள்சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. எட்வர்டு மூர் 0, கேப்டன் நெய்ல் பிராண்ட் 3, ரெனார்டு வான் டோன்டர் 31, சுபைர் ஹம்சா 36 ரன்களில் நடையை கட்டினர். அதிரடியாக விளையாடிய டேவிட் பெட்டிங்ஹாம் 96 பந்துகளில், 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார்.

கீகன் பீட்டர்சன் 16, கிளைடு போர்டுயின் 11, டுவான் ஆலிவர் 1, செப்போ மொரேகி 6, டேன் பாட்டர்சன் 15 ரன்களில் வெளியேறினர். ரூவான் டி ஸ்வார்ட் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 4, மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி ஹாமில்டன் நகரில் தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE