டிஎன்பிஎல் டி20 தொடர் | சாய் கிஷோர், சஞ்சய் யாதவ் தலா ரூ.22 லட்சத்துக்கு ஏலம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 8-வது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை லீக் ஆட்டங்கள் வெளி மாவட்டங்களிலும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 144 வீரர்களின் பெயர்கள் 4 பிரிவுகளில் இடம் பெற்றிருந்தது. இதில் இருந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தனர்.

இந்த வகையில் மொத்தம் 61 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சாய் கிஷோரை ரூ.22 லட்சத்துக்கும், இடது கை வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை ரூ.11.25 லட்சத்துக்கும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலம் எடுத்தது.ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த மற்றொரு இந்தியப் பந்துவீச்சாளர் சந்தீப் வாரியரை ரூ.10.50 லட்சத்துக்கு அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் வாங்கியது.

பி பிரிவில் இடம் பெற்ற ஐபிஎல் நட்சத்திர வீரரும் தமிழ்நாட்டின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவரான சஞ்சய் யாதவை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி ரூ.22 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமையை சாய் கிஷோரும், சஞ்சய் யாதவும் பெற்றனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக ஹரீஷ் குமாரை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ரூ.15.60 லட்சத்துக்கும், அபிஷேக் தன்வாரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரூ.12.20 லட்சத்துக்கும் வாங்கியது. பிசிசிஐ மற்றும் ஐசிசி முன்னாள் தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் ஏலத்திற்கு வருகை தந்து அனைவருக்கும் உற்சாகம் அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE