‘தோனிதான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்’ - ஷமி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய அணிக்காக தான் விளையாடிய போட்டிகளில் தலைசிறந்த கேப்டன் என்றால் அது தோனிதான் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி தெரிவித்துள்ளார். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்றும், ரோகித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மேன் என்றும் அவர் சொல்லியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தவர் ஷமி. 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் 3 போட்டிகளில் 5+ விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். இந்நிலையில், அவர் தோனி சிறந்த கேப்டன் என தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஷமி அறிமுகமானார். கோலி தலைமையிலான இந்திய அணியின் சிறந்த திறன் கொண்ட பவுலராக உருவெடுத்தார். தற்போது ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆஸ்தான பவுலராக ஷமி வலம் வருகிறார்.

“இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்த மகேந்திர சிங் தோனிதான் சிறந்த கேப்டன். ஒப்பீட்டின் அளவில் சிறந்த கேப்டன் யார் என்பதற்கு பதில் சொல்ல முடியாது. ஆனால், அதிக கோப்பைகளை வென்றவர் என்ற அடிப்படையில் தோனிதான் சிறந்தவர்” என ஷமி தெரிவித்துள்ளார். அவரிடம் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE