ஐபிஎல் 2024 தொடரில் கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த் - ரிக்கி பாண்டிங் உறுதி

By செய்திப்பிரிவு

டெல்லி: இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் களம் திரும்ப ஓராண்டு காலம் ஆகும் என சொல்லப்பட்டது. எனினும், தீவிர பயிற்சியின் காரணமாக உடல்நலன் தேறி வருகிறார் ரிஷப். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றவர், தற்போது கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில், "இந்த ஐபிஎல் சீசனில் விளையாடுவதில் ரிஷப் உறுதியாக இருக்கிறார். உண்மையில் இப்போது ரிஷப் உற்சாகமாக இருக்கிறார். ஆனால், அவரால் தொடர் முழுவதும் விளையாட முடியுமா, தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா என்பதுதான் தெரியவில்லை. அவரிடம் கேட்டால் 'தொடர் முழுவதும் விளையாடுகிறேன். 4வது வரிசை வீரராக பேட்டிங் செய்வேன். இதற்கு உறுதியளிக்கிறேன்' என்கிறார். அந்த மனநிலையில் தான் அவர் இருக்கிறார்.

ரிஷப் ஆற்றல் மிகுந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் எங்கள் அணியின் கேப்டன். உண்மையை சொன்னால் கடந்த ஆண்டு நாங்கள் அவரை மிஸ் செய்தோம். இந்த சீசனில் அனைத்து ஆட்டங்களிலும் இல்லாவிட்டாலும் குறைந்தது 10 ஆட்டங்களிலாவது விளையாடுவார் என்று நம்புகிறேன். பந்த் அணியை வழிநடத்தத் தயாராக இல்லை என்றால் டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை ஏற்பார்" என்று தகவல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE