ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் பும்ரா முதலிடம் பிடித்து புதிய சாதனை!

By செய்திப்பிரிவு

மும்பை: டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா. டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை.

விசாகப்பட்டினத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றியதை அடுத்து இந்த பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.

முன்னதாக, சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடித்திருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முதலிடத்தை பிடித்திருந்த விசாகப்பட்டினத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பதால் அவரது புள்ளிகள் சரிந்தது. இதையடுத்து அஸ்வின் மூன்றாவது இடத்துக்கு சரிய, பும்ரா முதலிடத்தை பிடித்தார். இதே பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பும்ரா, கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதேபோல், சமீபத்தில் 150+ டெஸ்ட் விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE