ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | கர்நாடகா அணிக்கு திரும்பினார் மயங்க் அகர்வால்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள கர்நாடகா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9-ம் தேதி தமிழகத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான கர்நாடகா அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதில் சமீபத்தில் விமான பயணத்தின் போது உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

32 வயதான மயங்க் அகர்வால், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்ததும் சூரத் செல்லும் விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், தவறுதலாக அருந்திய திரவத்தால் வாய் மற்றும் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதனால் அவர், ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது.

தற்போது முழு உடற்தகுதியை அடைந்த நிலையில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் அணிக்கு திரும்பி உள்ளார். இந்த சீசனில் மயங்க் அகர்வால் 4 ஆட்டங்களில் விளையாடி 44 சராசரியுடன் 310 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்களும், ஒரு அரை சதமும் அடங்கும். மயங்க் அகர்வால் திரும்பி உள்ள நிலையில் இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல்லும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 ஆட்டங்களில் விளையாடி 92.25 சராசரியுடன் 369 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரு சதங்கள் அடங்கும்.

23 வயதான தேவ்தத் படிக்கல் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்ததால் ரஞ்சி கோப்பை தொடரின் கடைசி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. தற்போது அவர், திரும்பி உள்ளது கர்நாடக அணியின் பேட்டிங்கிற்கு மேலும் வலுசேர்க்கும்.

கர்நாடகா அணி விவரம்: மயங்க் அகர்வால் (கேப்டன்), நிகின் ஜோஸ் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், சமர்த் ஆர், மணீஷ் பாண்டே, ஷரத் ஸ்ரீனிவாஸ், அனீஷ் கே.வி., வைஷாக் விஜயகுமார், வாசுகி கவுசிக், சஷிகுமார் கே, சுஜய் சதேரி, வித்வத் கவரப்பா, வெங்கடேஷ் எம், கிஷன் எஸ் பெதரே, ரோஹித் குமார் ஏசி, ஹர்திக் ராஜ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE