விசாகப்பட்டினம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
சொந்த மண்ணில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட அணுகுமுறை, டாம் ஹார்ட்லியின் சுழல் ஆகியவற்றால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதில் இருந்து மீண்டு வந்து இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியுடன் 2-வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதேசூழ்நிலையை இந்திய அணி எதிர்கொண்டிருந்தது. அப்போது சென்னையில் நடைபெற்ற முதல்டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அதன் பின்னர் 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைவென்றிருந்தது. இதனால் இம்முறையும் இந்திய அணிமீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது எளிதாக இருக்காது என்ற கருதப்படுகிறது.
» ஆட்சியமைக்க சம்பய் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு: இன்று ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கிறார்
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாதையை மறுவரையறை செய்துள்ள இங்கிலாந்து அணியின் அதிரடி மட்டை வீச்சு அணுகுமுறைக்கு எதிராக இந்திய அணிபோராட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது.
முன்னணி பேட்ஸ்மேனான ஆலி போப்பின் பேட்டிங் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களால் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு அவர், குவித்த 196 ரன்கள் பெரிய அளவிலான வித்தியாசத்தை ஏற்படுத்தியதுடன் வெற்றிக்கும் வழிவகுத்தது. அதேவேளையில் உலகத்தரம் வாய்ந்த ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எந்த ஒரு கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் ஆச்சர்யம் அளித்தது.
இதனால் விசாகப்பட்டினம் போட்டியில் இந்திய அணி புதிய திட்டங்களுடன் களமிறங்கக்கூடும். ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் குல்தீப் யாதவ், சர்ப்ராஸ் கான் அல்லது ரஜத் பட்டிதார் களமிறக்கப்படக்கூடும். 500விக்கெட்கள் மைல் கல் சாதனையை எட்டிப்பிடிக்க மேற்கொண்டு 4 விக்கெட்களை எதிர்நோக்கும் அஸ்வின், இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஸ்வீப் ஷாட்களுக்கு எதிராக தங்களது அணுகுமுறையை மாற்றிஅமைப்பதில் கவனம் செலுத்தக்கூடும். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்திய அணி களமிறங்க முடிவு செய்தால் வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமே இடம் பெறக்கூடும். 3-வதுசுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் அல்லது சவுரப் குமார் சேர்க்கப்படக்கூடும்.
முதல் டெஸ்ட் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட அணுகுமுறை இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை கடும் சோதனைக்கு உட்படுத்திய நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான டாம் ஹார்ட்லியிடம் சரணடைந்தனர். தனது அறிமுக ஆட்டத்திலேயே 7 விக்கெட்களை வேட்டையாடிய டாம் ஹார்ட்லி மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால்தரக்கூடும். ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியில் தங்களது இடத்தை வேரூன்றிக் கொள்ள வேண்டுமானால் சீராக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேவேளையில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நீண்ட நேரம்களத்தில் நின்று விளையாடுவதுடன் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டாக்ஸின் தலைமைப் பண்பு அனைவரையும் கவர்ந்திருந்தது. அறிமுக வீரரான டாம் ஹார்ட்லிக்கு அதிக ஓவர்கள் வழங்கியது, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கு தகுந்தவாறு திட்டங்களை களத்தில் செயல்படுத்தியது என ஒரு கேப்டனாக அணியை திறம்பட வழிநடத்தினார். விசாகப்பட்டினம் போட்டியிலும் வெற்றி பெற்று தனது முன்னிலையை 2-0 என அதிகரித்துக் கொள்வதில் இங்கிலாந்து அணி முனைப்புடன் செயல்படக்கூடும்.
நேரம்: காலை 9.30, நேரலை: ஸ்போர்ட்ஸ் 18
ஆண்டர்சன், பஷிர் உள்ளே… விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்றே அறிவிக்கப்பட்டது. இதில் இரு மாற்றங்கள் இருந்தது. முழங்கால் காயம் காரணமாக விலகி உள்ள ஜாக் லீச்சுக்கு பதிலாக 20 வயதான சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார். இது இவருக்கு அறிமுக போட்டியாகும். வேகப்பந்து வீச்சில் மார்க் வுட் நீக்கப்பட்டு அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கட், ஜோ ரூட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ராசியான மைதானம்: ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது. இங்கு 2019-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. இந்த இரு போட்டியிலும் மைதானம் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago