அன்று சுட்டி நண்பர்கள்... இன்று கிரிக்கெட் பிரபலங்கள்... இது ரொமாரியோ - ஷமர் ஜோசப் கதை!

By செய்திப்பிரிவு

கிரிக்கெட் உலகின் பேசுபொருள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேற்கு இந்திய தீவுகள் அணியின் காபா டெஸ்ட் வெற்றியும், வெற்றிக்கு காரணமான ஷமர் ஜோசப்பும்தான்.

216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் ஷமர் ஜோசப், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசி மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற உதவினார். இந்த வெற்றியானது 27 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகும். கடைசியாக 1997-ல் நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை அந்த அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் காபா டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் காரணமாக கால் விரலில் காயத்தை எதிர்கொண்டார் ஷமர். இதனால் அவர் களமிறங்க மாட்டார் எனக் கூறப்பட்டது. பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, 4வது நாளில் களம் இறங்கி ஆஸ்திரேலியாவின் 'ஸ்டார்' பேட்டிங் யூனிட் மீது ஒரு களேபரமே நிகழ்த்திவிட்டார் என்னும் அளவுக்கு சிறப்பான ஸ்பெல்லை வீசி அசர வைத்தார். கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் என காபா டெஸ்டில் ஆஸி.யின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசியாக விழுந்த 8 விக்கெட்களில் 7 விக்கெட்டை கைப்பற்றினார் ஷமர் ஜோசப்.

யார் இவர்? - மேற்கு இந்தியத் தீவுகளின் கயானா பகுதியில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். அவரது கிராமத்துக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு நாட்கள் படகில் பயணிக்க வேண்டும். பராகரா (Baracara) எனும் கிராமத்தை சேர்ந்தவர். 2018 வரையில் இந்த கிராமத்தில் முறையான தொலைத்தொடர்பு அல்லது இணைய சேவை இல்லமால் இருந்துள்ளதாக தகவல். மொத்தமே 350 பேர் வசிக்கும் நிலம். அவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள்.

தனது கிராமத்து வீதிகளில் கிரிக்கெட் விளையாடுவது தான் அவருக்கான பொழுதுபோக்கு. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர்கள் அம்ப்ரோஸ் மற்றும் வால்ஷ் தான் அவரது ரோல் மாடல். இருந்தும் குடும்ப சூழல் காரணமாக இரவு நேர காவலாளியாக அவர் பணியாற்றி வந்துள்ளார். அவரது வருமானத்தின் மூலம் குடும்பத்திற்கும், தனது 2 வயது பிள்ளைக்கும் உதவியுள்ளார். இருந்தும் தனது கிரிக்கெட் கனவை அவர் விடவே இல்லை.

கடந்த ஆண்டு ஜனவரியில் தொழில்முறை கிரிக்கெட்டர் ஆகும் முடிவுடன் பார்த்து வந்த வேலைக்கு விடை கொடுத்துள்ளார். செகண்ட் டிவிஷன் மற்றும் ஃபர்ஸ்ட் டிவிஷன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். விரைவில் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அப்படி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது பவுலிங் திறனை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதன் மூலம் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா பயணம் செய்த மேற்கிந்தியத் தீவுகளின்-ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். அங்கும் தனது திறனை நிரூபித்து தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தேர்வாகி இப்போது அதிலும் தன்னை உயர்த்தி கிரிக்கெட் உலகில் புதிய ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

ரொமாரியோ ஷெப்பர்ட் - ஷமர் ஜோசப்

ரொமாரியோ ஷெப்பர்ட் - ஷமர் ஜோசப் நட்பு: ஷமர் ஜோசப், மேற்கு இந்திய தீவுகளின் தேசிய அணியில் தேர்வாக முக்கிய காரணம், அந்த அணியின் ஒருநாள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட். ஷமர் ஜோசப்பும், ரொமாரியோவும் சிறுவயது முதலே நண்பர்கள். ஷமரை விட ரொமாரியோ ஐந்து வயது மூத்தவர். எனினும், இவர்கள் நட்பாக பழக இன்னொரு காரணம் இருவரும் அண்டை வீட்டார்கள். ஆரம்ப பள்ளிப் படிப்பை இருவரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள். இவை அவர்களின் நட்பை அதிகப்படுத்தியது. நட்பை மட்டுமல்ல, கிரிக்கெட்டையும்தான்.

சொல்லப்போனால் இருவரும் சேர்ந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளனர். ரொமாரியோவின் வீட்டு முற்றத்தில்தான் இருவரும் கிரிக்கெட் விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளனர். சில ஆண்டுகளில் ரொமாரியோ படிப்பு காரணமாக வேறு ஊருக்கு புலம்பெயர்ந்தாலும் ஷமர் ஜோசப் உடனான நட்பு தொடர்ந்துள்ளது.

ரொமாரியோ மேற்கு இந்திய தீவுகள் தேசிய அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தருணம் அது. மீண்டும் பராகரா கிராமத்துக்கு வந்தபோது ஷமரை சந்தித்து கொண்டபோது இருவரும் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது, ஷமர் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசியதை கண்டு திகைத்த ரொமாரியோ, உடனடியாக ஷமரை பராகரா கிராமத்தை காலி செய்ய வைத்து தன்னுடனேயே பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

அதன்பிறகான ஒவ்வொரு நாளும் கிராண்டன் நகரில் ரொமாரியோ உடன்தான் ஷமரின் பயிற்சி தொடங்கியது. கிரிக்கெட் சிஸ்டம் என்ன என்பதை ஷமருக்கு சொல்லிக் கொடுத்து ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக அவரை மாற்றியதுடன் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தார் ரொமாரியோ. அப்படியாக கயானா அணிக்காக தொடங்கிய ஷமரின் கிரிக்கெட் பயணம் தற்போது ஆஸ்திரேலிய வெற்றிவரை நீண்டுள்ளது.

“ஒரு வேகப்பந்து வீச்சாளராக எனக்கு ஒரு பெரிய உத்வேகமாக இருந்தவர் ரொமாரியோ ஷெப்பர்ட். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு தன்னம்பிக்கை அளித்தவரும் அவரே.” என்று தனது நண்பன் குறித்து சிலாக்கிறார் 24 வயதான ஷமர் ஜோசப்.

“ஷமருக்கு எனது அறிவுரை என்னவென்றால், கடினமாக உழைக்க வேண்டும். எப்போதும் போலவே நிறைய கேள்விகளைக் கேட்க வேண்டும். விளையாட்டை எப்போதும் மதிக்க வேண்டும். அவருக்கு இன்றைக்கு கிடைத்துள்ள புகழை கண்டு முதலில் மகிழ்ச்சி அடைவது நானே. ஷமருக்கு இனி வானமே எல்லை." என்று தனது நண்பன் ஷமரின் வெற்றி குறித்து ரொமாரியோ ஷெப்பர்ட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்