நேர் செட்டில் ஜோகோவிச்சை சாய்த்தார் சோங்கா: ரோஜர் கோப்பை டென்னிஸ்

ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்கா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டத்தில் சோங்காவின் சர்வீஸை எதிர்கொள்ள முடியாமல் ஜோகோவிச் தடுமாறினார். அதேநேரத்தில் சோங்கா 8 சர்வீஸ்களை மட்டுமே அடித்தார். ஆனால் சோங்காவின் சர்வீஸை நிறுத்தி திருப்பியடிக்க ஜோகோவிச் கடுமையாகப் போராடினார். இதனால் அவரால் கடைசி வரை சரிவிலிருந்து மீள முடியாமல் போகவே, தோல்வி தவிர்க்க முடியாததானது.

இதன்மூலம் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பு வரை தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார் ஜோகோவிச். தோல்வி குறித்துப் பேசிய ஜோகோவிச், “பேஸ் லைன், சர்வீஸ், திருப்பியடித்தல் (ரிட்டர்ன்) என எதுவும் சரியாக அமையவில்லை. மொத்தத்தில் எனது ஆட்டம் மிக மோசமாக அமைந்தது. நான் துல்லியமான ஷாட்களை அடிக்கவில்லை. ஏராளமான தவறுகளை செய்தேன்” என்றார்.

டொரன்டோ மைதானம் ஜோகோவிச்சுக்கு ஒருபோதும் சாதகமானதாக அமைந்ததில்லை. கடந்த மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வென்ற பிறகு அவர் விளையாடிய அடுத்த போட்டி ரோஜர் கோப்பைதான். இந்தப் போட்டியின் 2-வது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு மற்றொரு பிரான்ஸ் வீரரான கேல் மான்பில்ஸை வீழ்த்திய ஜோகோவிச்சால், 3-வது சுற்றைத் தாண்ட முடியாமல் போனது.

வெற்றி குறித்துப் பேசிய சோங்கா, “வருடத்தின் அனைத்து நாட்களிலும் இதுபோன்ற வெற்றிகளைப் பெற முடியாது. ஒவ்வொரு நாளும் குடும்பத்தை விட்டுவிட்டு கடுமையான பயிற்சியில் ஈடுபடவேண்டும். இன்று பெற்ற வெற்றியைப் போல பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.

தப்பினார் ஃபெடரர்

மற்றொரு 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் நூலிழையில் தப்பினார். அவர் 7-6 (5), 6-7 (3), 6-4 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.

அதேநேரத்தில் ஸ்விட்சர்லாந்தின் மற்றொரு முன்னணி வீரரும், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-7 (8), 5-7 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

மற்ற ஆட்டங்களில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், கனடாவின் மிலஸ் ரயோனிச் ஆகியோர் வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் செரீனா

மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து 200-வது வாரமாக முதலிடத்தில் இருக்கும் செரீனா, வெற்றி குறித்துப் பேசுகையில், “சஃபரோவா மிக அபாரமாக சர்வீஸ் அடித்தார். அதனால் சிறப்பாக சர்வீஸ் செய்ய வேண்டிய நிலை எனக்கும் ஏற்பட்டது” என்றார்.

ஷரபோவா, பெட்ரா தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லா சுரேஜ் 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். இதேபோல் ரஷ்யாவின் எக்டெரினா மகரோவா 6-4, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் விம்பிள்டன் சாம்பியனும், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

43 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்