டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கட்டும், ஒருநாள் சர்வதேச போட்டியாக இருக்கட்டும், ஏன் டி20-யாக இருந்தாலும் தொடக்க வீரர்களுக்கு அடுத்த டவுனில், அதாவது ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர்களுக்கு பொறுப்பும் சோதனையும் அதிகம். இக்கட்டான அந்த டவுனில் வெங்சர்க்கார், ராகுல் திராவிட், லஷ்மண், புஜாரா என்று இந்திய அணி நீண்ட பாரம்பரியம் கொண்டது. புஜாரா ஒழிக்கப்பட்ட டவுனில் ஷுப்மன் கில் அதிக விளம்பரத்துடன் இறக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவர் சுத்தமாக அந்த டவுனுக்குரிய எந்த ஒரு பேட்டிங் உத்தியோ, சாதுரியமோ, நீண்ட இன்னிங்ஸுக்கான பொறுமையோ எதுவும் இல்லாதவர் என்பதுதான் இதில் வருந்துக்கூடிய விஷயம்.
நடந்து முடிந்த ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் இறங்கும்போது ஷார்ட் மிட் விக்கெட் இல்லை. உடனே அனுபவசாலியான இங்கிலாந்து முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸிடம் சொல்லி ஷார்ட் மிட் விக்கெட்டை நிறுத்தச் செய்தார். அந்த இடத்தில் ஷுப்மன் கில் ஆட்டமிழப்பதை நாம் தொடர்ந்து பார்க்கிறோம். ஷுப்மன் கில் போன்ற டச் பிளேயர்களை பெரும்பாலும் 5-ம் நிலையில் இறக்குவதுதான் சிறந்தது. அவர் இறங்குவதற்குள் பந்தும் கொஞ்சம் பழசாகியிருக்கும். மேலும், எதிரணியின் முன்னணி பவுலர்களும் சில பல ஓவர்களை வீசி கொஞ்சம் களைப்படைந்து இருப்பார்கள். இதனால் அந்த இடத்தில் அவர் சிறப்பாக விளையாட முடியும். ஆனால், கில்லை 3-ம் நிலையில் இறக்குவது மோசமான ஒரு முடிவாகும். அவை நிரூபணமும் ஆகிக்கொண்டிருக்கிறது.
கிரிக்கெட்டில் ஏன் 3-ம் நிலை மிக முக்கியமானது.. கடுஞ்சோதனையானது என்றால், தொடக்க வீரர்கள் 0-விலிருந்து தொடங்குகின்றனர். பிரஷர் இருந்தாலும் அவர்களுக்கு சிக்கல்கள் கொஞ்சம் குறைவு. ஆனால் ஒரு அணி 0/1 விக்கெட் என்று ஆனாலும் 3ம் நிலை வீரர் மிக முக்கியமானவர். அதுவே 200க்கு நோ லாஸ் என்றாலும் 3ம் நிலை வீரர் இடம் மிக முக்கியமானது. ஏனெனில் 0/1 எனும் போது கடினமான பந்து வீச்சையும் புதிய பந்தையும் பிட்சின் தன்மையையும் கணித்து இன்னிங்ஸை கட்டமைத்து ஆட்டமிழக்காமல், கப்பல் கவிழாமல் நிலை நிறுத்த வேண்டும். அதே போல் 200/0 என்றாலும் ஒரு விக்கெட் விழும்போது 3-ம் நிலை வீரர் வந்தவுடன் ஆட்டமிழந்துவிட்டால் அடுத்த 60-70 ரன்களில் பெரும்சரிவு ஏற்பட்டு ஆல் அவுட் ஆவதும் நடந்துள்ளது. ஆகவே 3-ம் நிலை வீரர் ஏற்கெனவே குவித்த ஸ்கோரினால் பயனடைபவர் அல்ல. அது முக்கியமான ஒரு இடைநிலையாகும்.
அதனால்தான் அந்த டவுனில் இறங்கிய வீரர்கள் வரிசையைப் பார்த்தால், கிரிக்கெட் உலகின் மகா சாதனையாளர்களான கிரேட் டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ராகுல் திராவிட், வாலி ஹாமண்ட், குமார் சங்கக்காரா, புஜாரா, லஷ்மண் போன்ற வலுவான வீரர்கள் உள்ளனர். இப்படியான வீரர்களே ஒன் டவுனில் தேவை. ஒருநாள் போட்டிகளில் எடுத்துக் கொண்டால் விராட் கோலி நம்பர் 3-ல் இறங்கித்தான் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். 50 சதங்களை அடித்த உலக சாதனையை வைத்துள்ளார்.
» உடல்நலக்குறைவால் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி
» கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் பதக்கம் வென்று புதுச்சேரி ஓவியா சாதனை
ராகுல் திராவிட்டே 3-ம் நிலையில் ஒரு கட்டத்தில் சொதப்பியதால் அந்த இடத்தில் விவிஎஸ் லஷ்மணை தன் கேப்டன்சியில் இறக்கினார் சவுரவ் கங்குலி. அந்த 3-ம் நிலையில் ஆடிய அந்த கிரேட்டஸ்ட் டெஸ்ட் இன்னிங்ஸ்தான் கொல்கத்தாவில் அடித்த மறக்க முடியாத ஆல் டைம் கிரேட் 281 ரன்கள். ஆனால் அதன் பிறகு ஒரு 10 இன்னிங்ஸ்களில் லஷ்மண் 3-ம் நிலையில் விறுவிறுவென ஸ்கோர் செய்தாலும், குறைந்த ஸ்கோர்களில் ஆட்டமிழந்ததால் மீண்டும் திராவிட் கொண்டு வரப்பட்டார். திராவிட் அடிலெய்டில் 233 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 78 ரன்களையும் எடுத்து இந்திய அணி ஒரு அரிய வெற்றியை வலுவான ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்றது. திராவிட் இங்கிலாந்தில் ஒரே தொடரில் ஒரு இரட்டைச் சதத்தோடு 4 சதங்களை அடித்ததும் நம்பர் 3 நிலையில் இறங்கித்தான்.
ஆகவே மிகவும் முக்கியமான, சோதனையான அந்த டவுனில் ஷுப்மன் கில் தேறுவாரா என்றால் தேற வைப்பது கடினம் என்றுதான் தெரிகிறது. ஆனால் ஷுப்மன் கில்லுக்கு வணிகத் தரப்பு மற்றும் அணி நிர்வாக பேக்-அப் இருக்கிறது. அனில் கும்ப்ளே கூறுவது போல், ‘புஜாராவுக்குக் கிடைக்காத சலுகையும் ஆதரவும் ஷுப்மன் கில்லுக்குக் கிடைத்து வருகிறது. ஆனால் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை’.
ஸ்பின்னை ஆடும் போது முன் காலை ஒரேயடியாக நீட்டி மட்டையை கால்காப்புக்கு முன்னால் கொண்டு வந்து ஆடுகிறார் கில். இது தவறான உத்தி என்பதோடு இப்படி ஆடுபவர்களைப் பார்த்தாலே ஸ்பின்னர்கள் ‘இவர் விக்கெட் எனக்குத்தான்.. எனக்குத்தான்’ என்று போட்டியில் இறங்குவார்கள். மேலும் வலது கையை அழுத்தி அவர் தடுத்தாடுகிறார். வலது கையை கொஞ்சம் அழுத்தாமல் மேலோட்டமாகவே வைக்க வேண்டும். சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறுவது போல், “முன்னால் வந்து ஸ்பின்னர்களை ஆடுவதை விட பின் காலில் சென்று ஆடுவது தான் சிறந்தது. பந்து ஸ்பின் ஆன பிறகு ஆடலாம்.”
அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 128 ரன்களை 2023 தொடரில் எடுத்தார் ஷுப்மன் கில். அதன் பிறகு அவரின் ஸ்கோர் இதோ: 13, 18, 6, 10, 29*, 2, 26, 36, 10, 23, 0. ஒரு முறைதான் 30 ரன்களையே கடந்துள்ளார். இதுதான் இந்திய அணியின் சமீபத்திய பிரச்சினைகளுக்குக் காரணம். இன்னொரு வீரர் ஸ்ரேயஸ் ஐயர். இவர் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் அவரிடம் சீரான முறையில் ஸ்கோர்கள் வருவதில்லை. மிர்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய ரக குழிப்பிட்சில் 87 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் தன் விக்கெட்டைத் தூக்கி எறிந்து விட்டுச் சென்றார் இவர்.
எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் எதையும் பார்க்காமல் ஷுப்மன் கில்லுக்குப் பதில் ரஜத் படிதாரையும், ஸ்ரேயஸ் ஐயருக்குப் பதில் சர்பராஸ் கானையும் கொண்டு வர வேண்டும். ஷுப்மன் கில்லுக்கு கொடுத்த வாய்ப்புகளை கொஞ்சம் நிறுத்திவிட்டு அவரை ரஞ்சி டிராபியில், துலீப் டிராபியில் ஆடச்செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago