நடை பந்தயத்தில் சாதனையை முறியடித்தார் அக்‌ஷ்தீப்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: தேசிய ஓபன் நடை பந்தயம் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அக்‌ஷ்தீப் பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் 38 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற இதே தொடரில் அக்‌ஷ்தீப் இலக்கை 1:19:55 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்ததுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தார். தனது சொந்த சாதனையை தற்போது அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சுராஜ் பன்வார் இலக்கை 1:19:43 விநாடிகளில் கடந்து 2-வது இடத்தை பிடித்ததுடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு பந்தய தூரத்தை 1:20:10 விநாடிகளில் அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்துக்கு தகுதி பெற்றுள்ள 4-வது இந்திய வீரர் சுராஜ் பன்வார் ஆவார். கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய நடை பந்தயத்தின் வாயிலாக பிரம்ஜீத் பிஷ்ட், விகாஸ் சிங் ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

தனிநபர் டிராக் மற்றும் பீல்டு பிரிவில் ஒலிம்பிக்கில் ஒரு நாட்டில் இருந்து 3 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தற்போது 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்துக்கு இந்திய வீரர்கள் 4 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 3 பேரை இந்திய தடகள சம்மேளனம் தேர்வு செய்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE