ஆடுகளத்தில் விராட் கோலியின் சீண்டலை நினைவுகூர்ந்த டீன் எல்கர்!

By செய்திப்பிரிவு

டர்பர்ன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர். இந்த சூழலில் ஆடுகளத்தில் கோலியின் சீண்டலை அவர் நினைவுகூர்ந்துள்ளார். பாட்காஸ்ட் பதிவு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 86 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். தன்னுடைய 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 5000+ ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 37.28. கடந்த 2012-ல் அவர் அறிமுக வீரராக களம் கண்டார். இந்தியாவுக்கு எதிராக கடந்த 3-ம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். அதுவே அவர் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டி.

“இந்திய ஆடுகளத்தில் அந்த விக்கெட் வேடிக்கையானதாக இருந்தது. அப்போது நான் பேட் செய்ய வந்தேன். நான் ஜடேஜா மற்றும் அஸ்வினை எதிர்த்து விளையாட வேண்டி இருந்தது. கோலிக்கு எதிராகவும் நான் விளையாட வேண்டி இருந்தது. ஏனெனில், அவர் என் மீது துப்புவது போல செயல்பட்டார். ‘நீங்கள் அதை செய்தால் எனது பேட்டால் நான் பதிலடி தருவேன்’ என தெரிவித்தேன். இது குறித்து அறிந்த டிவில்லியர்ஸ், கோலி வசம் ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ என கேட்டார். அவர்கள் இருவரும் ஆர்சிபி அணி கூட்டாளிகள்.

அதன் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட வந்திருந்த போது அந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்” என எல்கர் தெரிவித்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் ஆட்டமிழந்த போது அவரது விக்கெட்டை கொண்டாடாமல், அவரை கட்டி அணைத்து வழி அனுப்பி வைத்தார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் எந்த தொடரில் நடந்தது என்பதை எல்கர் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE