கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: வாலிபால் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணிக்கு தங்கப் பதக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 சென்னை, திருச்சி, மதுரை, கோயம்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இடம் பெற்றுள்ள வாலிபால் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்தது.

ஆடவருக்கான வாலிபால் போட்டியில் நேற்று நடைபெற்ற 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆந்திரா, உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இதில் ஆந்திரா 26–24, 25–20, 25–20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹரியாணா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தமிழ்நாடு அணி 25-20, 25-23,22-25, 25-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம்வென்றிருந்தது. 2019-ம் ஆண்டில் தங்கப் பதக்கமும், 2020-ம் ஆண்டில் வெள்ளிப் பதக்கமும், 2022-ம் ஆண்டில் தங்கப் பதக்கமும் வென்றிருந்தது தமிழ்நாடு ஆடவர் அணி.

மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, குஜராத்தை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழ்நாடு மகளிர் வாலிபால் அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு வரலாற்றில் தமிழ்நாடு மகளிர் அணி பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் கேலோ இந்தியா விளையாட்டின் 4-வது பதிப்பில் தங்கப் பதக்கமும், 5-வது பதிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு மகளிர் அணியினர் தற்போது தொடர்ச்சியாக 3-வது முறையாக பதக்கம் வென்றுள்ளனர்.

3-வது இடத்துக்கான ஆட்டத்தை தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் மேற்கு வங்கம் 23–25, 25–22, 25–13, 25–23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

பளுதூக்குதல்: பளுதூக்குதலில் ஆடவருக்கான 89 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் தீர்ஷான் வெண்கலப் பதக்கம் வென்றார். சாலையோர சைக்கிள் பந்தயத்தில் ஆடவர் பிரிவில் தமிழகத்தின் எஸ்.நிதின் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

நீச்சலில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் தமிழகத்தின் நித்திக் நாதெள்ளா வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் தமிழகத்தின் தீக்சா சிவகுமார் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பிரிவில் தமிழகத்தின் நிதி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE