ரஞ்சி கோப்பை 2-வது போட்டி: இன்னிங்ஸ், 293 ரன்களில் தமிழ்நாடு அணி அபார வெற்றி!

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் நடைபெற்று வரும், சண்டிகார் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 293 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி, கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு - சண்டிகார் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. டாசில் வெற்றி பெற்ற சண்டிகார் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது.

தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 610 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தமிழ்நாடு அணியின் சார்பில், தொடக்க வீரர் ஜெகதீசன் 321 ரன்களும், பிரதோஷ் பவுல் 105 ரன்களும், பாபா இந்திரஜித் 123 ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து சண்டிகார் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் சார்பில் அர்சலான் கான், ஹர்நூர் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. அந்த அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அர்சலான் கான் 9 ரன்களுக்கும், ஹர்நூர்சிங் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் மயங்க் சித்து 38 ரன்களுக்கும், குணால் மகாஜன் 17 ரன்களுக்கும், கேப்டன் மணன் வோரா 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து வந்த அன்கித் கவுசிக் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து வந்த ராஜ் பாவா 5, குரிந்தர் சிங் 35 ரன்கள், ஆர்பித் பானு 1, முருகன் அஷ்வின் 8, ஹார்டிஜேஸ்வி கபூர் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 71 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தமிழ்நாடு அணியின் சார்பில், கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஜீத் ராம் 3 விக்கெட்டுகள், சந்தீப் வாரியர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 293 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE