IND vs ENG முதல் டெஸ்ட் | 28 ரன்களில் இங்கிலாந்து வெற்றி: அறிமுக வீரர் ஹார்ட்லி அபாரம்!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி இருந்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 88 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 436 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா என மூவரும் தலா 80+ ரன்களை எடுத்தனர். பரத் 41 ரன்களும், அக்சர் படேல் 44 ரன்களும் எடுத்தனர். அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆலி போப் 196 ரன்கள் எடுத்தார். பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் அவருக்கு சப்போர்ட் செய்தனர். இந்திய சுழற்பந்து வீச்சை ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் என டீல் செய்தது இங்கிலாந்து. அதன் மூலம் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்திய ரசிகர்களின் இதயங்களை தகர்த்த ஹார்ட்லி: இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய சூழல் இருந்தது. போட்டியை வர்ணனை செய்த முன்னாள் இந்திய வீரர்கள், இங்கிலாந்து அணியின் அனுபவம் இல்லாத சுழற்பந்து வீச்சை சுட்டிக்காட்டினர். இத்தகைய சூழலில் ஜெய்ஸ்வால், கில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அக்சர் படேல் என இந்தியாவின் முதல் நான்கு விக்கெட்களை கைபற்றி அசத்தினார் சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி. 24 வயதான அவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டி. அவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர். தொடர்ந்து ராகுல் விக்கெட்டை ரூட் கைப்பற்றினார். ஜடேஜா 2 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

பரத் - அஸ்வின் கூட்டணி: 7 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. அந்த நிலையில் கே.எஸ்.பரத் மற்றும் அஸ்வின் கூட்டணி அமைத்தனர். இருவரும் 57 ரன்கள் சேர்த்தனர். பரத் மற்றும் அஸ்வின் என இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரது விக்கெட்டையும் ஹார்ட்லி வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்ட காரணத்தால் நான்காம் நாளின் ஆட்ட நேரம் கூட்டப்பட்டது. களத்தில் சிராஜ் மற்றும் பும்ரா இணைந்து 25 ரன்கள் சேர்த்தனர். சிராஜ் விக்கெட்டையும் ஹார்ட்லி வீழ்த்த இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. இதன் மூலம் 28 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஹார்ட்லி, 26.2 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்களை அவர் கைப்பற்றி அசத்தினார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE