கேலோ இந்தியா | வாலிபாலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழக அணி

By செய்திப்பிரிவு

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 9-வது நாளான நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் 67 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் ஆகாஷ் 242 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

73 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் வசந்தகுமார் 246 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் கனிகா 168 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆந்திராவின் சுஷ்மிதா (173 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார்.

சாலையோர சைக்கிள் பந்தயத்தில் மகளிர் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீமதி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். கேரளாவின் அலனிஸ் தங்கப் பதக்கமும், ஜார்க்கண்டின் சந்தோஷி ஓரான் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஆடவருக்கான ஹாக்கியில் ஒடிசா தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் ஒடிசா 4-0 என்ற கோல் கணக்கில் மத்திபிரதேசத்தை வீழ்த்தியது. மகளிருக்கான ஹாக்கியில் ஹரியானா தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் ஹரியானா 1-0 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தியது.

வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற செட் கணக்கில் ஆந்திராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் மகளிர் பிரிவில் தமிழக அணி 1-3 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

நீச்சல் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் ஜாய்ஸ்ரீ (1:16.26 வினாடிகள்) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். குஜராத்தின் வினிகா தங்கப் பதக்கமும், அசாமின் பகிபோரா வெள்ளிப் பதக்கமும் வென்றனர். திருச்சியில் நடைபெற்று வரும் களரிபயட்டு விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான சுவடுகல் பிரிவில் தமிழக வீரர் சுர்ஜித் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE