“உண்மையான திறமைக்கு எல்லைகள் இல்லை” - போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மீண்டும் ஒருமுறை, வயது தடையல்ல என்பதை அபார திறமை கொண்ட ரோஹன் போபண்ணா காட்டியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெற்றிபெற்ற அவருக்கு வாழ்த்துகள். எப்பொழுதும் தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறமைகளை வரையறுக்கிறது என்பதற்கு அவரது சிறப்புமிக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டல். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா: உண்மையான திறமைக்கு எல்லைகள் இல்லை. ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெற்றிபெற்ற போபண்ணாவுக்கு வாழ்த்துகள். உங்கள் இடைவிடாத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம், நீங்கள் ஒரு சர்வதேச அடையாளமாகி விட்டீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இரட்டையர் பிரிவில் 43 வயதாகும் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். அதிக வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றவர் ரோஹன் போபண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE