மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: 289 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி

By செய்திப்பிரிவு

பிரிஸ்பன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

பிரிஸ்பனில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் மேற்குஇந்தியத் தீவுகள் அணியானது 8 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் 71, ஜோஷுவா டி சில்வா 79 ரன்கள் சேர்த்தனர். கெவின் சின்கிளேர் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 108 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 54 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை தாரை வார்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 6, மார்னஷ் லபுஷேன் 3, கேமரூன் கிரீன் 8, டிராவிஸ் ஹெட் 0, மிட்செல் மார்ஷ் 21 ரன்களில் நடையைகட்டினர். இதன் பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடினார். மட்டையை சுழற்றிய அவர், 49 பந்தில்,ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில்ஷாமர்ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 2 ரன்னில் நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் பாட்கம்மின்ஸ், உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். கவாஜா 131 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் சின்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பாட் கம்மின்ஸ் 73 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 4, கேமர் ரோச் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

22 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்தது. கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE