ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று தொடங்கிய இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 64.3 ஓவர்கள்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இங்கிலாந்து பேட்டர்கள் ஸ்பின் பந்துகளுக்கு பந்தின் லைனுக்கு ஆட வேண்டுமே தவிர, பந்தின் போக்கிற்கு ஆடக்கூடாது. லைனுக்கு தங்கள் உத்தியை வகுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் பந்தின் போக்கிற்குச் செல்கின்றனர். இது தவறான உத்தி. ஸ்டோக்ஸ் அருமையாக ஆடினார். ஜோ ரூட் நல்ல உத்தியுடன் ஆடினார். இங்கிலாந்தின் பிரச்சனை இதுதான். பந்து ஏடாகூடமாக திரும்பும் என்று நினைத்தே அவர்கள் ஆடினர். ஆனால் அவ்வளவு மோசமாக திரும்பி எழும்பவில்லை என்பதுதான் உண்மை இன்னொரு விஷயம் பவுன்ஸ் மீது நம்பிக்கை வைக்கலாம். பொதுவாக இந்திய ரகக் குழிப்பிட்ச்களில் பவுன்சை நம்ப முடியாது.ஒரு பந்து மேலே வரும் மற்றொரு பந்து கணுக்காலுக்குக் கீழ் பாம்பு போல் தாழ்வாகச் செல்லும். இந்தப் பிட்ச் அப்படியில்லை.
பிட்ச் ரிப்போர்ட்டின் படி வறண்ட பிட்ச் என்பதால் சுழலுக்கு சாதகமாக அமைந்து பந்துகள் திரும்பின. ஆனால் முதல் பந்திலிருந்தே அல்ல 10 ஓவர்களுக்குப் பிறகே சில பந்துகள் குட் லெந்தில் பிட்ச் ஆகி திரும்பத் தொடங்கின. ஸ்பின்னர்களுக்கும் பவுன்ஸ் இருந்தது. அனில் கும்ப்ளே காலையில் கூறியது போல் இது போன்ற பிட்ச்களில் குல்தீப் யாதவ் நிச்சயம் நன்றாக வீசி இருந்திருப்பார். ஆனால் சிராஜ் தேவையில்லாமல் செலக்ட் செய்யப்பட்டு 4 ஓவர்களே வீசினார். அதுவும் செம சாத்து வாங்கினார். இங்கிலாந்து அணி ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது அவர்கள் டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறை. இது ஒரு பெரிய ரெக்கார்ட் என்றும் கூறப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் இருக்கிறாரே என்று கூறலாம். ஆனால் அவர் பந்து வீச மாட்டார் என்றே தெரிகிறது.
தொடக்க வீரர்கள் பென் டெக்கெட் - ஜாக் கிரவ்லி ஜோடி நன்றாகத் தொடங்கினர். 8 ஓவர்களில் 41 ரன்களை விளாசினர். 10 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்து ஒருவேளை பாஸ்பால் ஆட்டம் காட்டுவார்களோ என்று லேசாக ரோஹித்திற்கு உதறலாகவே இருந்தது. சிராஜ் செம அடி வாங்கினார். 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து அதன் பிறகு பந்து வீச அழைக்கப்படவே இல்லை. பும்ரா நன்றாக வீசினார். அஸ்வின் பந்துவீச வந்தபிறகு பிட்சில் ஸ்பின் இருப்பது தெரியவந்தது.
பென் டெக்கெட் 39 பந்துகளில் 7 ஆக்ரோஷ பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்து அஸ்வின் பந்தில் எல்.பி.ஆனார். அது அம்பயர்ஸ் கால் ஆனது. உண்மையில் சந்தேகத்தின் பலன் பேட்டருக்குத்தான் செல்ல வேண்டும். நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்தால் அது நாட் அவுட். இப்படிப்பட்ட ஒரு அம்பயர்ஸ் கால் என்ற முறை தேவைதானா என்று தோனி பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆலி போப் வந்த வேகத்தில் ஒரு ரன் எடுத்திருந்த சமயத்தில் ஜடேஜா பந்து ஒன்று போதிய அளவு திரும்பி எழும்ப, அதனை முன் காலை நீட்டி போப் ஆட மட்டை விளிம்பில் பட்டு ரோகித் சர்மாவிடம் ஸ்லிப்பில் தஞ்சமடைந்தது. ஜாக் கிரவ்லி 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து நன்றாகத்தான் ஆடினார். ஆனால் அஸ்வின் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று மிட் ஆஃபில் சிராஜின் நல்ல கேட்சுக்கு வெளியேறினார். ஒரு விதத்தில் அஸ்வினுக்கு தன் விக்கெட்டை பரிசாக அளித்தார் என்றே கூற வேண்டும். இங்கிலாந்து சட்டென 60/3 ஆனது.
இந்தியாவில் டெஸ்ட்களில் நன்றாக ரன்களைக் குவித்த ஜோ ரூட்டும், ஓரளவுக்கு ஸ்பின் ஆடும் பேர்ஸ்டோவும் இணைந்து ஸ்கோரை 121 ரன்களுக்கு உயர்த்தினார்கள். பேர்ஸ்டோ எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஸ்பின் பந்துகளை நன்றாக எதிர்கொண்டு 37 ரன்களை 5 பவுண்டரிகளுடன் எடுத்து ஆடி வந்த போது இன்றைய தினத்தின் ஆகச்சிறந்த பந்தில் பவுல்டு ஆனார். இடது கை ஸ்பின்னர்களின் பெருமிதம் என்றே இதை அழைக்க வேண்டும். அதாவது பந்து லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி திரும்பி விருட்டென்று பேர்ஸ்டோ மட்டையைக் கடந்து ஸ்டம்பைத் தாக்கியது. மிக அருமையான பந்து அது. பேர்ஸ்டோ ஸ்டம்பைக் கவர் செய்யவில்லை என்பதால் கிளீன் பவுல்டு ஆனார்.
ஜோ ரூட் 29 ரன்களில் ஸ்வீப் ஆடப்போய் டாப் எட்ஜ் ஆகி பைன் லெக்கில் பும்ராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் ஒருமுனையில் நின்று ஆடிக்கொண்டிருக்க பென் ஃபோக்ஸ், ரேஹன் அகமது ஆகியோர் சொற்ப ரன்களில் காலியாகினர். ரேஹன் அகமது, பும்ராவின் சமயோசித ஸ்லோ பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார்.
அதன் பிறகு அறிமுக ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி இறங்கினார். இவர் 23 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். 2 பவுண்டரிகள் 1 சிக்சரையும் விளாசி ஜடேஜா பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். அதன் பிறகே பென் ஸ்டோக்ஸ் வெறியாட்டம் ஆடத் தொடங்கினார். ஜடேஜாவைப் போட்டு பின்னி எடுத்துவிட்டார். 6 பவுண்டரிகள் 3 பெரிய சிக்சர்கள், ரிவர்ஸ் ஷாட்கள் என்று அவர் 70 ரன்களை எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்தார். கடைசியில் பும்ரா ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்து லேசாக வெளியே எடுக்க ஒதுங்கிக் கொண்டு கவருக்கு மேல் தூக்க நினைத்த ஸ்டோக்ஸ் பந்தைக் கோட்டை விட பவுல்டு ஆக இங்கிலாந்து 246 ரன்களுக்குச் சுருண்டது. ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 18 ஓவர்களில் 88 ரன்கள் விளாசப்பட்டார்.
பாஸ்பால் அதிரடியை இங்கிலாந்து ஆடும் என்று பார்த்தால் இப்போது இந்தியா தான் ஆடி வருகின்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவர்களில் இந்திய அணி 119/1. ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 70 பந்துகளில் 76 ரன்களுடனும், கில் 43 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 24 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago