குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கவில்லை: மேரி கோம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதைப் பார்த்தேன். அது உண்மையல்ல. நேற்று(ஜனவரி 24) திப்ருகரில் உள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினேன். விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற தாகத்துடன் இன்னமும் நான் இருக்கிறேன். ஆனால், வயது வரம்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியில் என்னால் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. இருந்தபோதும், நான் எனது விளையாட்டைத் தொடர்கிறேன்.

எனது உடல் தகுதி விஷயத்தில் நான் இன்னமும் கவனமாக இருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சியில் நான் பேசிய பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் ஓய்வு பெறுவதாக இருந்தால் முறைப்படி ஊடகங்களைச் சந்தித்து அதனை தெரிவிப்பேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேரி கோம், “பாக்சிங் ரிங்குங்குள் விளையாடும் ஆர்வம் எனக்குள் அப்படியே உள்ளது. ஆனாலும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் வயது வரம்பு சார்ந்த விதி காரணமாக நான் அதை தொடர் முடியாது. 40 வயது வரை மட்டுமே ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டையில் விளையாட முடியும். வயது வரம்பு முடிந்துவிட்டதால் என்னால் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் விளையாட விரும்புகிறேன். ஆனால், வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நான் ஓய்வு பெறுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம், 5 முறை ஆசிய சாம்பியன் பட்டம் ஆகியவற்றை வென்றவர் மேரி கோம். குத்துச்சண்டை மட்டுமல்லாது விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் இந்தியாவின் இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மேரி கோம் மிகப் பெரிய உந்துசக்தியாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE