மீண்டும் சர்பராஸ் கான் ‘ஒழிப்பு’ - கோலிக்கு பதில் டெஸ்ட் அணியில் ரஜத் படிதார்!

By ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகிய விராட் கோலிக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 30 வயதைக் கடந்தவர். மீண்டும் மும்பையின் சர்பராஸ் கான் ஒழிக்கப்பட்டுள்ளார். நிச்சயம் கிரிக்கேட் காரணங்களுக்காக சர்பராஸ் கான் ஒழிக்கப்படவில்லை என்ற சந்தேகத்தை இப்போதைய ஓரங்கட்டலும் நமக்கு ஏற்படுத்துகிறது.

ரஜத் படிதார் 55 முதல் தரப்போட்டிகளில் 93 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை 45.97 என்ற சராசரியில் 12 சதங்கள் 22 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். 79 கேட்ச்களை எடுத்துள்ளார். மும்பையின் சர்பராஸ் கான் 44 போட்டிகளில் வெறு 65 இன்னிங்ஸ்களில் 3751 ரன்களை 68.20 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். 13 சதங்கள், 11 அரைசதங்கள். படிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 53.48 என்றால், சர்பராஸ் கானின் ஸ்ட்ரைக் ரேட் சுமார் 70.49 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

சர்பராஸ் கான் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக அங்கே 68, 34 ரன்களை எடுக்க, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 96, 4, 55 என்ற ஸ்கோர்களை எடுத்துள்ளார். எல்லாவற்றையும் விட சர்பராஸ் கானின் வயது 26. ஆகவே தரமதிப்பீடு செய்தால் வயதின் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலும் சர்பராஸ் கான் தான் பெட்டர் பிளேயர்.

ஆனால் படிதார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் 2023-ம் ஆண்டில் காயம் காரணமாக பெரும்பான்மை சீசனை ஆடாமலே இழந்தவர். லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பியுள்ளார். ஆனால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கடந்த வாரம் படிதார் 158 பந்துகளில் 151 ரன்களை விளாசியதுதான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வானதற்குக் காரணம். அதுவும் இந்திய ஏ அணி 227 ரன்களுக்கு ஆட்டமிழந்ததில் படிதார் 151. மத்தியப் பிரதேசம் 2022-ல் முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றதில் படிதாரின் பங்களிப்பு அதிகம்.

ரஜத் படிதாரிடம் தேர்வுக்குழுவினர் கண்ட ‘அதிசயம்’ என்னவெனில் கடினமான பிட்சில் ஆடக்கூடியவர் என்பதுதான். சர்பராஸ் கானும் இதை விட கடினமான பிட்சிலும் சூழ்நிலையிலும் ஆடியவர்தான். அணியில் எடுத்த பிறகு விதந்தோதப்படுவது வழக்கம்தான். அதற்காக படிதாரின் திறமையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். சர்பராஸ் கானுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் நம் பார்வை.

மேலும் ஐபிஎல் தான் இந்திய டெஸ்ட் செலக்‌ஷனிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு சூர்யகுமார் யாதவுக்குப் பிறகு படிதார் தேர்வும் சாட்சியமாகின்றது.ஐபிஎல் 2022 தொடரில் படிதார் 8 இன்னிங்ஸ்களில் 333 ரன்களை எடுத்தார். இதில் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எதிலும் இந்திய அணிக்கு ஆடாத வீரர் என்ற வகையில் பிளே ஆஃப் சுற்றில் சதம் எடுத்த புகழும் இவருக்குச் சேர்ந்தது. ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிராக மேட்ச் வின்னிங் சதமும் எடுத்தார்.

மும்பையின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார், படிதார் பற்றிக் கூறும்போது, “படிதார் ஒரு கிளாஸ் பிளேயர். அவர் பேட்டிங் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார். அனைத்தையும் விட இந்தியா ஏ அணிக்காக நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக 2 சதங்களை விளாசினார். இந்த பிரமாதமான ஆட்டங்கள்தான் அவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

ஆனால், இவருக்கு முன்னரே சர்பராஸ் கான் பல ரஞ்சி டிராபிகளில் நிரூபித்துள்ளார். ஏ தொடர்களிலும் இப்போது நன்றாக ஆடுகிறார். வயதின் சாதகம் இவருக்கு உள்ளது. இவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றுதான் கூறுகிறோம். ஷுப்மன் கில்லுக்குப் பதில் சர்பராஸ்கானையும் விராட் கோலிக்குப் பதில் படிதாரையும் எடுத்திருக்கலாம் தான். அடுத்து ரிங்கு சிங் வரிசையில் காத்திருப்பதால் டெஸ்ட் அணித் தேர்வில் சர்பராஸ் கான் வாய்ப்பு இனி அவ்வளவுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி நடந்தால் உண்மையில் அது பெரிய சோகமும் வேதனையையுமே அளிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE