“இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் கீப்பர் இல்லை” - பயிற்சியாளர் திராவிட்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வியாழக்கிழமை ஹைதராபாத் நகரில் இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், துருவ் ஜுரல் என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

“இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார். அணியை தேர்வு செய்தபோதே அந்த முடிவில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதனால் தான் அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள்தான் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார்கள்” என திராவிட் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் செயல்பட்டு இருந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடாத நிலையில் ராகுல், விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதை பயிற்சியாளர் திராவிட் உறுதி செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE