வங்கதேச பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 3 நோ-பால் வீசிய ஷோயப் மாலிக்

By செய்திப்பிரிவு

டாக்கா: வங்கதேச பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஷோயப் மாலிக், அடுத்தடுத்து மூன்று நோ-பால்களை வீசியது சர்ச்சை ஆகியுள்ளது. கடந்த வாரம் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட அவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

41 வயதான ஷோயப் மாலிக் ஃபார்ச்சூன் பாரிஷால் அணிக்காக வங்கதேச பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டரான அவர், திங்கட்கிழமை அன்று குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசினார். இந்த ஆட்டத்தில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவர் மூன்று நோ-பால் வீசி சர்ச்சையில் சிக்கினார். அந்த ஓவரில் மொத்தமாக 18 ரன்களை கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக 3 நோ-பால் வீசியது பேசு பொருளானது. அதோடு அந்தப் படமும் சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டது.

1999 முதல் 2021 வரையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என 446 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 11,867 ரன்கள் மற்றும் 218 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். தற்போது உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு ஃப்ரான்சைஸ் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.

சானியா மிர்சாவை முறைப்படி விவாகரத்து செய்தாரா என்ற விவாதம் எழுந்தது. இது குறித்து சானியா மிர்சா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. மாலிக் மூன்றாவது திருமணம் செய்து கொண்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE