ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் - கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதிச் சுற்றுக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிமெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று உலக சாதனை படைத்தவருமான நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் அட்ரியன் மேனா ரினோ ஆகியோர் மோதினர்.

இதில் ஜோகோவிச் 6-0, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் பிரான்ஸ் வீரர் அட்ரியனை வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 44 நிமிடங்கள் நீடித்தது.

இதைத் தொடர்ந்து ஜோகோவிச் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். கால் இறுதியில் ஜோகோவிச், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொண்டு விளையாடுவார்.

பெடரர் சாதனை சமன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறியதன் மூலம், அதிக முறை கிராண்ட்ஸ்லாம் போட்டி கால் இறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

இதுவரை பெடரர் 58 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் கால் இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தார். அதை தற்போது ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரர் கரன் கச்சனோவை வீழ்த்தினார்.

மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6, 5-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸைத் தோற்கடித்தார்.

சபலென்கா முன்னேற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவுக்கு கால் இறுதிச் சுற்றுக்கு ரஷ்ய வீராங்கனை அரினா சபலென்கா முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில், 2-ம் நிலை வீராங்கனையான சபலென்கா, அமெரிக்க வீராங்கனை அமந்தா அனிஸ்மோவாவுடன் மோதினார். இதில் சபலென்கா 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் 6-1, 6-2 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை மக்டலீனாவை வீழ்த்தி கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை பார்பரா கிரெஜிகோவா 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆன்டிரிவாவை சாய்த்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE