ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ், 129 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி!

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி, சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவை  ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸின் முடிவில், 144 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 489 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கோவை வீரர் ஜெகதீசன் 402 பந்துகளில் 245 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரயில்வேஸ் அணி 79.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரதாம் சிங் 92 ரன்கள் எடுத்தார். நிஷாந்த் குஷ்வா 36 ரன்கள், முகமது சயிப் 28 ரன்கள், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான உபேந்திரா யாதவ் 21 ரன்கள் எடுத்தனர். அணியில், கடைசியாக களமிறங்கிய 5 பேரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் தமிழ்நாடு அணியின் சார்பில், கேப்டன் சாய் கிஷோர் மற்றும் வாரியர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது அலி மற்றும் அஜீத் ராம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைதொடர்ந்து, ‘ஃபாலோ ஆன்’ பெற்ற ரயில்வேஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிஷாந்த் குஷ்வாலா 1, விவேக் சிங் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், பிரதாம் சிங், முகமது சயிப் இணைந்து அணியை மீட்க போராடினர். ஆனால், முடியவில்லை. பிரதாம் சிங் 29 ரன்கள், முகமது சயிப் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் உபேந்திரா யாதவ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ரயில்வேஸ் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

கரண் சர்மா 4, குணால் யாதவ் 1 ரன்கள் எடுத்தனர். யுவராஜ் சிங், ஆகாஷ் பாண்டே, சிவம் செளத்ரி ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய சகாப் யுவராஜ் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ரயில்வேஸ் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 114 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE