‘வில் - அம்பு’ சைகை செய்து சதத்தை கொண்டாடிய கே.எஸ்.பரத்!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்தியா-ஏ கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் கே.எஸ்.பரத் சதம் விளாசி அசத்தி இருந்தார். அதன் மூலம் இந்தியா-ஏ அணி இந்தப் போட்டியை டிரா செய்தது. தான் சதம் விளாசியதை ‘வில்-அம்பு’ சைகை செய்து கொண்டாடினார். இது வைரல் ஆனது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் நாளை (ஜன.22) கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் தனது சதத்தை இப்படியாக பரத் கொண்டாடியது கவனம் ஈர்த்துள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். முதல் இருந்து போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியின் ஆடுகளங்களில் பந்து அதிகம் சுழலும் என்பதால் ரெகுலர் விக்கெட் கீப்பருடன் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தியா-ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 553 ரன்கள் எடுத்தது. இந்தியா-ஏ அணி 227 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது லயன்ஸ் அணி. 489 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

சாய் சுதர்ஷன் 97 ரன்கள், சர்ஃபராஸ் கான் 55 ரன்கள், பிரதோஷ் 43 ரன்கள், மனவ் சுதர் 89 ரன்கள் எடுத்தனர். 165 பந்துகளை எதிர்கொண்ட பரத், 116 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுத்தது. அதன் காரணமாக ஆட்டம் டிரா ஆனது. பரத்தின் இந்த சதம் இந்திய அணியில் தனக்கான ஆடும் லெவன் வாய்ப்பு வேண்டும் என்பதை உரக்க சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE