“பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளது”- சுனில் கவாஸ்கர் கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பாஸ் அணுகுமுறையை எதிர்கொள்ள தங்கள் வசம் ‘விராட்பால்’ இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ‘விராட்பால்’ என அவர் சொல்வது இந்திய வீரர் விராட் கோலியை தான். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை ஹைதராபாத் நகரில் தொடங்க உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மார்ச் 11-ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் பாணி ஆட்டம்.

கடந்த முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது டெஸ்ட் தொடரை இழந்திருந்தது இங்கிலாந்து அணி. அதன் பிறகு கேப்டன், அணி மற்றும் பயிற்சியாளர் என பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்று அசத்தி இருந்தது.

இந்தச் சூழலில் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “பாஸ்பாலை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளது. விராட் கோலியின் அபார ஃபார்மை பாருங்கள். அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. அவர் 50+ ரன்களை சதமாக மாற்றுவதில் அபார திறன் கொண்டவர். கடந்த 1-2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி பாஸ்பால் ஆட்டம் ஆடி வருகிறது. ஆட்டத்தின் சூழல் ஏதுவாக இருந்தாலும் அந்த அணியின் பேட்டர்கள் அதிரடியாக ஆடி ரன் சேர்க்கின்றனர். அந்த பாணி இந்தியாவுக்கு எதிராக எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை இந்த தொடரில் பார்க்க முடியும்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE