ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் | 4-வது சுற்றில் கால்பதித்தார் அல்காரஸ்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வதுசுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் தகுதி பெற்றுள்ளார். முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், சீனாவின் ஷாங்ஜுன்செங் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கார்லோஸ் அல்காரஸ் 6-1,6-1 என முதல் 2 செட்களைக் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 3-வது செட் ஆட்டத்தில் ஷாங்ஜுன்செங் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அல்காரஸ் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்ற 3-வது சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 7-6, 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சனையும், ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமேவையும் வீழ்த்தினர்.

மகளிர் பிரிவு 3-வது சுற்றுஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் லாத்வியாவீராங்கனை ஜெலினா ஆஸ்டபென்கோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

முதல் நிலை வீராங்கனையும், போலந்து நாட்டைச் சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக் 3-வதுசுற்றில் 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE